நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் வெளியிட்டது. திரைப்படத் துறையில் கமலஹாசனின் சேவையைப் பாராட்டி, இந்த விருதை வழங்குவதாக பிரான்ஸ் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிரான்ஸின் செவாலியர் விருது அளிக்கப்பட்டது. சிவாஜி கணேசனுக்குப் பின்னர், இவ்விருதைப் பெறும் தமிழர் என்ற பெருமையைக் கமலஹாசன் பெற்றுள்ளார்.
தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ள கமலஹாசன், சிறந்த நடிகருக்கான தேசிய விருதினை 3 முறை பெற்றுள்ளார்.
இதுதவிர, இந்திய அரசின் பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், உள்ளிட்ட விருதுகளைப் பெற்றுள்ள கமலஹாசனுக்கு, திரைப்படத்துறையில் அவரது சேவையைக் கவுரவிக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டின் கலைத்துறையின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.