சிறுநீரகத்தில் கற்கள்! தெரிந்ததும் தெரியாததும்

351

நமது உடலில் உள்ள முக்கியமான உறுப்புகளில் ஒன்று சிறுநீரகங்கள்.

உடலிலுள்ள ரத்தத்தை சுத்திகரித்து, கழிவை சிறுநீராக வெளியேற்றும் முக்கியமான பணியை செய்வது சிறுநீரகங்களாகும்.

சிறுநீர் கற்கள் என்றால் என்ன?

பொதுவாக சிறுநீரில் பல வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவற்றுள் கிரிஸ்டல் எனப்படும் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட்) ஒன்று சேர்ந்து திடப்பொருள்களாக, சிறுநீர்த் தாரைகளில் படியாமல் இருக்கின்றன.

சிலருக்கு ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் இவற்றின் விகிதங்களை மாற்றி இவற்றைச் சிறு துகள்களாகவோ, கற்களாகவோ படிய வைக்கின்றன. இவையே நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

அறிகுறிகள்

சிறுநீரகக் கல் மிகச்சிறிய அளவில் இருந்து மிகப்பெரியளவு வரை அதாவது ஒரு பந்தின் அளவு வரைக்கூட வளரும்.

பொதுவாக இந்த கற்கள் சிறுநீர்ப் பாதையில் அடைப்பு ஏற்படுத்தாதவரை, அறிகுறிகள் வெளியில் தென்படாது.

சிறுநீரகத்தில் உற்பத்தியாகும் இந்த கல் உடலில் இருந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது தாங்கமுடியாத வலி ஏற்படக்கூடும்.

இதனால் சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். கற்களின் வெளிபரப்பு முட்கள் போல் இருந்தால் நீர் பாதையின் சவ்வுப்படலத்தில் உராய்ந்து சிறுநீரில் ரத்தம் வெளிவரக்கூடும், மேலும் முதுகில் வலி ஆரம்பித்து, அது வயிற்றுப்பகுதிக்கு மாற்றமாகுதல்.

அடிவயிற்றில் வலித்தல், தொடைகள், அந்தரங்க உறுப்புகளில் வலி, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் ஆகியவை ஏற்பட்டால் அது சிறுநீரக கல்லாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

காரணம் என்ன?

சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதற்கு உணவுப்பொருள் ஒரு காரணமாக இருக்கலாம்.

அதேவேளையில் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்று கூறமுடியாது.

பரம்பரையால் கூட சிறுநீரகக்கல் பிரச்சனை ஒருவரைத் தாக்கலாம் நோயாளிகளில் நான்கில் ஒருவருக்கு இந்நோய் பரம்பரையாக வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

advertisement

முக்கியமாக கால்சியம், மக்னீசியம், ஆக்சலேட், பாஸ்பேட் உப்புகளால் இவை உருவாகின்றன. ஒருவருக்கு ஒருமுறை சிறுநீரகத்தில் கற்கள் தோன்றினால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு(Parathyroid) எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, தொற்றுகள்(infection) காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம்.

தடுக்கும் வழிகள்

சில உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலமும் தினமும் 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்துவதன் மூலமும் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் ஓரளவு தடுக்கலாம்.

அதாவது ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும். மேலும் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை தினசரி உணவுகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.

உப்பு, இனிப்பு வகைகள், இறைச்சி ஆகியவற்றை குறைத்து கொள்ள வேண்டும். வாழைத்தண்டை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும்.

சிகிச்சைகள்

பொதுவாக அளவில் சிறியதாக (4 மி.மீ) உள்ள சிறுநீரக கற்கள் தானாகவே வெளியேறிவிடும். அதுவே 6 மி.மீற்றருக்கு மேல் என்றால் 20 சதவீதம் வெளியேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஆனால் 1 செ.மீ அளவு வளர்ந்துவிட்டால் வெளியேறுவது சிரமம் தான். எனவே அதற்கான சிகிச்சை வகைகளை பார்ப்போம்

லித்தோட்ரைப்ஸி(Lithotripsy): கற்களின் அளவு மற்றும் அதனின் அமைப்பிடம் ஆகியவற்றை பொறுத்து லித்தோட்ரைப்ஸி சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

ஒரு வித அதிர்வு அலைகளை உருவாக்கி அதன் மூலம் சிறு நீரகத்தில் உள்ள கற்களை சிறிது சிறிதாக பிரிக்கப்படும். பின்னர் அவைகள் எளிதாக சிறுநீருடன் உடலில் இருந்து வெளியேறிவிடும். எனினும் இந்த சிகிச்சையின் போது வழி ஏற்படும் என்பதால் மயக்க மருந்து தரப்படுகிறது.

அறுவை சிகிச்சை: லித்தோட்ரைப்ஸி சிகிச்சையால் குணப்படுத்த முடியாமல் போனால் நெப்ரொலித்தொதோமி (Nephrolithotomy) என்னும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது சிறிய அளவிலான டெலெஸ்கோப் மற்றும் சில கருவிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை மூலம் கற்கள் வெளியேற்றப்படுகின்றன.

லேசர் லித்தொட்ரைப்ஸி (Laser Lithotripsy): அளவில் பெரியதாக இருக்கும் கற்களை கரைப்பதற்கு இந்த சிகிச்சையே சிறந்த முறையாகும்.

இந்த வகை சிகிச்சையில் மிக நுண்ணிய கமெராவை உடலின் உள் செலுத்தி கற்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கின்றனர். பின்னர் லேசர் மூலம் கற்களை ஆயிரமாயிரம் சிறிய கற்களாக பிரிக்கின்றனர். பின்னர் அவை எளிதான சிறுநீரோடு வெளியேறி விடுகின்றன.

SHARE