சுவிற்சலாந்தில் பல்லாயிரம் புலம்பெயர் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து மரியாஸ்ரைன் திருத்தலத்தில் மகத்தான திருப்பலி

294

இலங்கையரின் இதயத்தில் இடம் பிடித்த மருதமடுத்தாயாரின் திருவிழா, 22வது ஆண்டாக சுவிற்சலாந்து நாட்டில் மிகவும் கருத்துள்ள விதத்திலே இவ்வாண்டும் கொண்டாடப்பட்டுள்ளது.

சுவிற்சலாந்து நாட்டின் சொலத்தூர்ண் மாநிலத்தில் உள்ள மெற்செர்லென் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள மரியாஸ்ரைன் திருத்தலத்தில், சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்க ஆன்மிகப் பணியகத்தால் ஒழுங்கு செய்து கொண்டாடப்பட்ட இவ்விழாவிற்கு சுவிற்சலாந்து நாட்டின் பல பாகங்களிலிருந்தும், ஏனைய ஜரோப்பிய நாடுகளிலிருந்தும் பல தமிழ் மக்கள் வந்து மருதமடுத்தாயாரின் விழாவில் கலந்து ஆன்மீக அருள் நலம் பெற்றுச் செல்லுகின்றுள்ளனர்.

ஆன்மீகத்தையும், உலகில் அமைதி நிலவவேண்டும் என்னும் வேண்டுதலையும் முன்னிலை படுத்தியதாகவே இவ் விழா வழிபாடு அமைகின்றது.

நேற்று 19ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு மாலைப் புகழ் ஆராதனையும் (வேஸ்பர்) இன்று காலை 10.30 மணிக்கு திருவிழாத் திருப்பலியும், அதனைத் தொடர்ந்து அன்னையின் திருவுருவப் பவனியும் நடைபெற்றது.

அலங்கரிக்கப்பட்ட மோட்டார் ஊர்தியிலே பசுமையின் வர்ணத்தைப் பறைசாற்றும் வயல்வெளியே மருதமடுத் திருத்தாயார் பவனி வரும் காட்சி ஆன்மீகச் செழுமையின் மற்றோர் வெளிப்பாடாக இருந்தது.

இவ்வாண்டு திருவிழாத் திருப்பலியை இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் வழிகாட்டுதலில் இயங்கும் மாதா தொலைக்காட்சியின் இயக்குனர் அருட்பணி டேவிற் ஆரோக்கியம் அடிகளார் தலைமையேற்று ஒப்புக் கொடுத்தார்.

அத்தோடு இவ்விழாவில் சுவிஸ் கத்தோலிக்க திருச்சபையின் வெளிநாட்டு கத்தோலிக்க மக்களுக்கான குருமுதல்வர் மேன்மைமிகு லூயிஸ் கப்பில்லா, இலங்கையிலிருந்தும், இந்தியாவிலிருந்தும், ஏனைய ஜரோப்பிய நாடுகளிலிருந்தும் பல குருக்கள் கலந்து கொண்டனர்.

மரியாஸ்ரைன் திருத்தலத்தைப் பாதுகாத்து வரும் ஆசீர்வாதப்பர் துறவற சபையின் துறவிகளுக்கான முதல்வர் மேன்மைமிகு பீற்றர் வென் சுரெ அவர்கள் இத்திருவிழாத் திருப்பலிக்கு வந்திருக்கும் அனைவரையும் வரவேற்று இவ் ஆன்மீக நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.

மரியாஸ்ரைன் திருத்தலத்தின் ஆன்மீக விழாக்களுக்கான வழிகாட்டி அருட்பணி லுட்விக் அடிகளாரும் கலந்து கொள்கின்றார்.

மருதமடுத்தாயார் மொழி, இனம், சமயம் அனைத்தையும் கடந்த நிலையில் அனைவருக்கும் அருள் கொடைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார்.

இதனால் தான் அனைத்து மக்களும் அன்னையை நாடி வருகின்றனர். கத்தோலிக்க மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் மட்டுமல்ல ஏனைய சமயச் சகோதரர்களும், ஏனைய மொழி பேசுகின்ற மக்களும் இவ்விழாவிற்கு வருகை தந்திருந்தனர்.

இலங்கை நாட்டைத் தாக்கிய உள்நாட்டுப் போரின் போது பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக் கணக்காண மக்கள் மருதமடுத் திருத்தாயாரின் திருத்தலத்தில் அடைக்கலம் புகுந்து, மன நிம்மதியோடு வாழ்ந்ததை யாரும் மறக்க மாட்டார்கள்.

மருதமடு மாதாவே மனுக்குலத்தின் தாயாரே என்னும் மருதமடுத் திருத்தாயாருக்கான பாடலைக் கேட்கின்றபோதும் அதனைப் பாடுகின்ற போதும் எழும் மனவெழுச்சி வார்த்தைகளால் எடுத்தியம்ப முடியாதது.

மருதமடுத் திருத்தாயாரின் விழா ஆன்மிக தூய்மையையும், அன்னைக்கு செலுத்தும் நன்றித் தானதருமங்கள் அர்த்தமுள்ளவையாக அமையவும், கடந்த பல ஆண்டுகளாக உணவுத் தானம் வழங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது.

அன்னைக்கு நன்றி செலுத்தித் தாம் பெற்றுக் கொண்ட நன்மைத்தனங்களுக்காக அன்னதானம் கொடுக்க விரும்புகின்றவர்கள் அதற்குரிய பெறுமதியை இலங்கையில் வறுமையில் வாழும் மக்களுக்கு கொடுத்து உதவினால், அது மருதமடுத் திருத் தாயாருக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாக இருக்கும் என்பதை அன்போடு சுவிஸ் தமிழ்க் கத்தோலிக்கப் பணியகம் ஆலோசனையாக வழங்குகின்றது.

625.500.560.350.160.300.053.800.748.160.70 (7)

 

SHARE