நுவரெலியா மாவட்டத்தில் முறையற்ற காணி பகிர்வு – ஸ்ரீதரன் குற்றச்சாட்டு

230

நுவரெலியா மாவட்டத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

22.08.2016 நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் வழங்கக்கூடாதென்று இங்கு பேசப்பட்டது. இதற்கு எனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன். ஏழைத் தொழிலாளர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் இடம்இல்லை. மாத்தளை, கண்டி போன்ற வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நுவரெலியாவில் காணிகள் பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய மாகாணசபை உறுப்பினர் ஒரு றம்பொடை பகுதியில் பாரிய இடமொன்றினைக் கைப்பற்றியுள்ளார். டன்பார் தோட்டத்திலுள்ள பல ஏக்கர் நிலம் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. காணி கச்சேரி வைத்து நுவரெலியா மாவட்டத்தில் உண்மையில் காணி தேவையானவர்களுக்குக் காணிகள் வழங்கப்படவில்லை. இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் கவனம் செலுத்தவேண்டும். நுவரெலியா மாவட்டத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உரிய பரிசோதனை செய்யவேண்டும்.
அரசாங்கம் மாறியதால் புரட்டொப்பாதை செப்பனிடப்படாமலுள்ளதாக இங்கு கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. பாதை செப்பனிடப்படாமைக்கு அரசாங்கம் மாறியது தான் காரணமென்றால் இவ்விடயம் குறித்து முதலமைச்சர் அவர்கள் பிரதம மந்திரியின் கவனத்துக்குக்கொண்டு வரவேண்டும்.

நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளில் உயர்தரம் கற்பதற்காக வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் அனுமதிக்கக்கூடாதென்று இங்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தில் முறைகேடான வகையில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களை உயர்தரத்துக்கு அனுமதித்த அதிபர்களுக்கு மாத்திரமின்றி அதிகாரிகள் தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நிலையில் உயர்தரத்தில் கணிதம், விஞ்ஞானம் பாடநெறிகளைத் தொடரமுடியாத இரத்தினபுரி, கண்டி, பதுளை பெருந்தோட்டப்பகுதி மாணவர்கள் குறித்துச் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

பதுளை மாவட்டத்திலுள்ள தோட்டப்பகுதி மாணவர்கள், நுவரெலியா மாவட்ட பாடசாலை அனுமதி கிடைக்காத பெற்றோர்கள் என்ன சொல்லுகின்றார்கள் தெரியுமா? நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வடிவேல் சுரேஸ் , அரவிந்தகுமார் ஆகியோரை நாங்கள் வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம். ஆனால் எங்கள் பிள்ளைகளை ஏன் நுவரெலியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகளில் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று என்னிடம் கேட்கிறார்கள்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் பொறுப்பிலா அல்லது மத்திய மாகாண அமைச்சின் பொறுப்பிலுள்ளதா? இவ்விடயம் குறித்து உரிய பதில் தேவைப்படுகின்றது. கிளங்கன் வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருகின்றனர். வைத்தியசாலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும். டிக்கோயாவிலிருந்து டிலரிக்குச் செல்லும் பாதை காபட் இடப்பட்டுள்ளபோதும் அந்தப்பாதையில் பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. இந்தப்பாதையைப் பாராமரிப்பதில் வீதி அதிகார சபை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed

SHARE