மத்திய மீன்பிடி அமைச்சின் நீர்த்தேக்கத்துடனான கிராமம் திட்டத்தில் தேசிய ரீதியில் 13 மாவட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன அதில் வடமாகணத்தில் மூன்று மாவட்டங்களில் இருந்து கிராமங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன அவை யாழ் மாவட்டத்தில் நாகதீப, கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு மற்றும் மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை குளத்தை அண்டிய குருவில் என்பனவாகும்.
கடந்த மூன்றாம் மாதம் கொழும்பில் மத்திய மீன்பிடி அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பாக ஆராயப்பட்டது. அக்கலந்துரையாடல் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர், மேற்படி திட்டத்தினூடாக தெரிவுசெய்யப்பட்ட கிராமங்களுக்கான அடிப்படை கட்டுமான வசதிகள், மக்களின் வாழ்வாதாரம், வீட்டுத்திட்டங்கள் போன்ற அபிவிருத்தி பணிகள் இரண்டு வருடங்களினுள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் இதன் மூலம் அக்கிரமம் மட்டுமல்லாது அயல்கிராமங்களும் நன்மையினை பெறமுடியும் என்று தெரிவித்தார்.
மேலும் மன்னார் மாவட்டத்தில் இத்திட்ட ஆரம்ப நிகழ்வானது கடந்தவாரம் மத்திய மீன்பிடி அமைச்சர் மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டபோது மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கட்டுக்கரை குளத்தை அண்டிய குருவில் கிராமத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மற்றும் மாகாண மீன்பிடி அமைச்சர்களுடன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் மற்றும் அமைச்சர் ரிசாட் பதியுதீனின் பிரதிநிதியாக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.