99 வகைப் பூக்களை வரைந்த 5 வயது பூரணி!

273

‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்தில் சூர்யா 99 வகை பூக்களின் பெயர்களைச் சொல்வாரே. அவை சங்க இலக்கிய நூலான குறிஞ்சிப் பாட்டில் வரும். அந்த 99 பூக்களையும் ஓவியமாக வரைந்து அசத்தியிருக்கிறார் முதல் வகுப்பு படிக்கும் பூரணி.

மதுரை எல்லீஸ் நகர் தனியார் பள்ளியில் படிக்கும் பூரணி வரைந்த ஓவியங்களை, மதுரை யூ.சி மேல்நிலைப்பள்ளியில் கண்காட்சியாக வைக்கப்பட்டது.

பூரணியின் நண்பர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஓவியங்களைப் பாராட்ட, பூரணியின் முகமெல்லாம் சிரிப்பு.

“எப்படி பூரணி, இப்படி அசத்தினீங்க” என்றால்

” நான் எல்.கே.ஜி ல படிக்கும்போதிருந்தே வரையிறதுன்னா ரொம்ப பிடிக்கும். எப்ப எதுகேட்டாலும் அப்பா வாங்கி தருவாங்க. ஆனா நான் அவங்க கிட்ட அடிக்கிற கேட்கிறது டிராயிங் மெட்டீரியல்தான்.

99 பூக்களை வரையலாம்னு ஐடியா கொடுத்ததே எங்க அப்பாதான்” என்கிறார் பூரணி இடையிடையே சிரித்துக்கொண்டே.

மகள், மழலை மொழியில் மகள் பேட்டி கொடுப்பதை ரசித்த பூரனியின் தந்தை அதலையூர் சூரியகுமார்,”எனது மகளுக்கு ஓவியத்தின் மேல் இருக்கும் ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனால் அவள் பிறந்தநாளுக்குகூட கலர் பென்சிலும், வாட்டர் கலரும்தான் வாங்கிக்கொடுத்தேன்.

அதற்கு பின்னர் அவளது கிரியேட்டிவிட்டி எல்லை கடந்து வீட்டுச்சுவர்கள் வரை பறந்தது. ஆனால் பூரணியைத் திட்டவில்லை அவளது எண்ணம்போல் வரைய வைத்தேன்.

சில மாதங்களுக்கு பிறகு அவளது ஓவியங்களுக்கு உயிர்கொடுக்க நினைத்து அதனை எனது நண்பர்களுக்கு பரிசளித்தேன். எனது நண்பர்கள் இவ்வளவு சின்னவயதில் இப்படிபட்ட ஆர்வமா என்று வியந்தனர்!

பிறகு பூரணிக்கு இணையத்தின் மூலமாக வரைய ஐடியாக்களைக் கொடுத்தேன். அதே ஆர்வத்தை முறைப்படுத்த அவளை குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிடும் காந்தள் முதல் புழகு வரை இருக்கும் 99 பூக்களை வரைய சொன்னேன்.

பிறகு அதற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக்கொடுத்தேன். அவளே 99பூக்களையும் தனித்தனி பேப்பர்களில் நான்கு மாதங்களில் வரைந்து முடித்தாள். அதனைத் தற்போது வெளிக்கொண்டுவரும் நோக்கத்தில் எனது நண்பர்களின் உதவியோடு தற்போது கண்காட்சிக்கு வைத்துள்ளேன்.” என்றார்

அப்பா பேசிக்கொண்டிருக்க, அருகில் இருந்த சார்ட்டில் ஓவியம் ஒன்றை வரைய ஆரம்பித்தார் பூரணி. பூரணியின் ஓவியப் பயணம் பல சாதனைகளை நிகழ்த்தட்டும்.

SHARE