யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு முழு ஆதரவு வழங்கப்படும்! – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

220

kajenthirakumar

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24 ஆம் திகதி யாழில் நடைபெறவுள்ள பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி மற்றும் அதன் ஆதரவாளர்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை (29.09.2016) தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்பே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் மாவட்ட அமைப்பாளர்களைச் சந்தித்திருந்தோம். எதிர்வரும் 24ஆம் திகதி யாழில் தமிழ் மக்கள் பேரைவயின் ஏற்பாட்டில் மாபெரும் பேரணி ஒன்று இடம்பெறவுள்ளது. இது தொடர்பில் எமது கட்சி சார்பாக எட்டு மாவட்டங்களிலும் செய்யக் கூடிய செயற்பாடுகளை கலந்துரையாடியிருந்தோம்.

எமது அமைப்பு சார்ந்தவர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வது தொடர்பிலும் யாழ் மாவட்டத்திற்கு பிற்பாடு ஏனைய மாவட்டங்களிலும் இந்த பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதில் மக்களை கலந்து கொள்ளச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அதனை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் குரலை ஓங்கி ஒலிக்கச்செய்ய தமிழ் மக்கள் பேரவை முன்னெடுத்துள்ள இந்த பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னனி தனது முழுமையான ஆதரவினை வழங்கும். அதேவேளை, எமது மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வரை ஜனநாயக ரீதியாக தொடர் போராட்டங்களை எமது கட்சி நடத்துவது தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தோம் எனத் தெரிவித்தார்.

SHARE