கொழும்பு, பம்பலப்பிட்டி கொத்தலாவல அவனியூ பகுதியில் கடத்தப்பட்ட கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் விசாரணை அதிகாரிகளை உள்ளடக்கிய 20 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று நண்பகல் ஆகும் போது ஏற்கனவே வெளிநாட்டுப் பயணம் தடை செய்யப்பட்டுள்ள ஐந்து வர்த்தகர்கள் உள்ளிட்ட 8 பிரபல வர்த்தகர்களை இந்த விவகாரம் தொடர்பில் விசாரணையாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். அத்துடன் அவர்களது சாரதிகள் என நம்பப்படும் 8 பேர் உள்ளிட்ட மொத்தமாக 50 பேருக்கும் அதிகமானோரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்துள்ள பொலிஸார், சந்தேக நபரை துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள விரிவான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதன்படி இதுவரை சந்தேக வலயத்துக்குள் வைத்து விசாரணை செய்யப்பட்டு வரும் 8 வர்த்தகர்களும் கொலை இடம்பெற்றதாக நம்பப்படும் கடந்த 21 ஆம் திகதியன்று எங்கு சென்றார்கள்? யாருடன் இருந்தார்கள்? யாருக்கெல்லாம் அழைப்பை ஏற்படுத்தினார்கள்? அன்றைய தினம் அவர்களது வாகனம் எத்தனை கிலோ மீற்றர்கள் பயணித்துள்ளன உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து பொலிஸார் அவதானம் செலுத்தியுள்ளனர்.
இதற்காக குறித்த வர்த்தகர்களின் சாரதிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ள விசாரணையாளர்கள், வர்த்தகர்களின் தொலைபேசி வலையமைப்பை மையப்படுத்தியும், கொழும்பு முதல் மாவனெல்லை வரையிலான ஏ–1 பிரதான வீதியில் உள்ள அனைத்து சீ.சீ.ரீ.வி. கமெராக்களை ஆய்வு செய்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் நேரடி மேற்பார்வையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஸாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் டி சில்வாவின் கீழான விசாரணைக் குழுக்களே இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
இந்நிலையில் நேற்று வரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இக்கொலையின் பிரதான சந்தேக நபராக கருதப்படும் ஒருவர் குறித்து பல தகவல்கள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளதாகவும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்துடன் வர்த்தகர் சகீப் சுலைமானின் படுகொலையானது ஒரு ஒப்பந்தக் கொலையாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் எனவும்அது தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒப்பந்தக் கொலை சந்தேக நபர்கள் மாவனெல்லை பகுதியில் தலைமறைவாகியிருக்கலாம் எனும் கோணத்தில் விஷேட விசாரணைகள் இடம்பெறுவதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.
இதனை விட கடந்த 23ஆம் திகதி வர்த்தகர் சகீபின் தந்தைக்கு கேகாலை பகுதியின் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றிலிருந்து அழைப்பை ஏற்படுத்தி 2 கோடி ரூபா கப்பம் கோரியவரை அடையாளம் காணவும் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரையிலான விசாரணையின்படி சகீப் சுலைமான் மிகத் திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமைக்கான சாத்தியங்கள் கூடுதலாக உள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
படுகொலை தொடர்பில் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் சந்தேக நபர்கள் என கருதி ஐவருக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கும் நிலையில் அவர்கள் வெளி நாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த ஐவருக்கு எதிராகவே இந்த வெளிநாட்டுப் பயணத் தடை பெறப்பட்டுள்ளது.
இவர்கள் இக்கொலை மற்றும் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ளார்களா என விசாரணை தொடரும் நிலையில் அவர்கள் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முற்பட்டால் அல்லது விமான நிலையம் வந்தால் அவர்களது கடவுச்சீட்டுக்களை பறிமுதல் செய்து அது தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்க தேசிய உளவுப் பிரிவின் பணிப்பாளருக்கும் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கும் நீதிவான் நிஸாந்த பீரிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வாரம் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவுக்கு உள்ளான வர்த்தகர்கள் கொலை செய்யப்பட்ட வர்த்தகரின் தாய்வழி உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு மேலதிகமாக விசாரணைக்கு முகம் கொடுத்துள்ள ஏனைய மூன்று வர்த்தகர்களும் சகீப்புடன் நெருக்கமாக பழகியவர்கள் எனவும் சகீப்புக்கு நெருக்கமாக இருந்த அவரது எதிரியே அவரைக் கொலைச் செய்திருக்க வேண்டும் எனவும் விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
இந்தோனேஷியா, சீனா ஆகிய நாடுகளில் இருந்து துணிகளை தனது தந்தையுடன் சேர்ந்து இறக்குமதி செய்யும் கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் சகீப் சுலைமான் (வயது 29) கடந்த 21 ஆம் திகதி வெள்ளவத்தை பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் நண்பர்களுடன் கொள்ளுப்பிட்டியில் உள்ள பிலா வுஸில் தேநீர் அருந்தியுள்ளார்.
அதன் பிறகே மனைவிக்கு சாப்பாடும் எடுத்துக்கொண்டு அவர் அங்கிருந்து வீடு நோக்கி சென்றுள்ளார். வீட்டின் அருகே சென்றுள்ள அவர் வீட்டின் பிரதான வாயிலை திறக்குமாறு மனைவிக்கு தொலைபேசியில் தனது காருக்குள் இருந்தவாறே அறிவித்துள்ளார்.
இதன்போது வீட்டுக்குள் இருந்து வெளியே வந்துள்ள மனைவி பிரதான வாயிலை திறந்துள்ளார். திறக்கும் போது, காரில் இருந்த தனது கணவரான
கோடீஸ்வர வர்த்தகரை வேனொன்றில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திக்கொண்டு செல்வதை தான் கண்டதாக மனைவி பம்பலப்பிட்டி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரின் விசாரணைகளில் தனக்கு 4 மற்றும் 3 கோடி ரூபா மோசடி செய்த இருவர் குறித்து வர்த்தகர் சகீப் குற்றப்புலனாய்வு பிரிவிலும் 45 மற்றும் 35 இலட்சம் ரூபா மோசடி செய்தவர்கள் குறித்து மோசடி தடுப்புப் பிரிவிலும் அவர் முறைப்பாடு செய்துள்ளமை தெரியவந்தது.
இந்நிலையில் வர்த்தகரிடம் மோசடி செய்தோர் அதிலிருந்து தப்பிக்கொள்ள இந்த கடத்தலை முன்னெடுத்தனரா என்ற கோணத்திலும் விசாரணைகள் ஆரம்பமாகின. வர்த்தகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ள நிலையில் பம்பலப்பிட்டி பகுதியின் பல சீ.சீ.ரி.வி. கமெராக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் வர்த்தகர் சகீப்பின் உறவினர்கள், நண்பர்கள் என பலரிடமும் கூட பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர். இந்நிலையிலேயே சகீப்பை விடுவிக்க மர்ம நபர் ஒருவர் 2 கோடி ரூபா கப்பம் கோரியமையும் அந்த கோரிக்கை கேகாலை தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றிலிருந்து விடுக்கப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டது.
இவற்றை மையப்படுத்தி விசாரணைகள் தொடர்ந்த நிலையிலேயே சகீப்பின் சடலம் மாவனெல்லை – ஹெம்மாத்தகம பிரதான வீதியின் உக்குலேகம பள்ளத்தாக்கில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களைத் தேடிய விசாரணைகள் தொடர்கின்றன.