சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை வைத்திருந்து இயக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில்முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவருக்கு எதிராகவும் வழக்கு

218

சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை வைத்திருந்து இயக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் மீதும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தினால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை சட்டவிரோதமாக இயக்கியதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது.

இவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களில் மூவர் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகளாவர்.

அட்மிரல் சோமதிலக திசநாயக்க, அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே, அட்மிரல் ஜெயந்த பெரேரா ஆகிய மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுமே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.

இவர்களை விட பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலர் தமயந்தி ஜெயரத்ன, மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோ, மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல, மேஜர் நிசங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை இயக்கி, அவன்ட் கார்ட் நிறுவனம் 11.4 பில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றிருப்பதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

SHARE