கினிகத்தனையில் தங்க நகை பட்டரையில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்ற மூவரை பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இராணுவத்திலிருந்து தப்பி வந்த மூவர் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கினிகத்தனை கண்டி வீதியில் பகதுலுவ பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை நிலையத்துடன் நகை பட்டறையாக இயங்கி வந்த நகையகத்திற்கு நேற்று (01) மாலை 3 மணியளவில் வெள்ளை நிற மருதி காரில் வந்த மூவர் தங்க நகை வேண்டும் என கேட்டுள்ளனர்.
இதன்போது கடையிலிருந்த தங்க நகைகளை காட்டிய போது கத்தியை காட்டி கடையுரிமையாளரையும் கடையிலிருந்த மற்றெருவரையும் தாக்கிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்து காரில் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர் உடனடியாக உரிமையாளரினால் கினிகத்தனை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தேக நபர்கள் காரினை கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் தப்பிச்சென்ற மூவரில் ஒருவரை பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் தகவலையடுத்து ஏனைய இருவரையும் பேராதெனிய பகுதியில் நேற்று (01) இரவு கைது செய்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மூவரும் பேராதெனிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட 40 இலட்சம் ரூபாய் தங்க நகைகளை யாழ்பாணத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த தங்க நகைகளை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.