முன்னாள் போராளிகளின் மறு வாழ்வு பற்றி அவர்களது கருத்துக்கள் கவனிக்கப்படுமா?

218

42146

முன்னாள் போராளிகளின் மறு வாழ்வு பற்றி அவர்களது கருத்துக்கள் கவனிக்கப்படுமா? அவ்வப்போது காணும் பிரச்சினைக்கு தீர்வு தேடும் முறைமை சரியானதா?

நல்லிணக்க பொறிமுறை தொடர்பான முன்னெடுப்புக்கள் பலவும் பேசப்படுகின்றன, முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் காணாமல் போனவர்கள் தொடர்பாக சில நகர்வுகளை அரசு சட்ட ரீதியான ஆயத்தங்களையும் செய்து வருகின்றன.

ஐ.நாவின் மனித உரிமைக்கூட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவற்றின் சிபாரிசிற்கு இணங்க நல்லிணங்க பொறிமுறைக்காக அரசு ஏற்படுத்தவுள்ள கட்டமைப்புக்கள் பற்றிய கருத்தறியும் செயலணி நியமிக்கப்பட்டு அவை கடந்த வாரத்தில் பரவலாக வடகிழக்கில் 17 அமர்வுகளை நடாத்தி மக்களின் கருத்துக்களை பெற்றுள்ளனர்.

இவற்றில் சரளமாக பேசப்படும் விடயங்களுக்கு அப்பால் முன்னாள் போராளிகளின் விடயங்கள் உடனடியாக அணுக வேண்டியவையாகவுள்ளன. அவை அவ்வாறு அணுகப்படுகின்றனவா? என்ற ஆதங்கம் அவர்கள் மத்தியில் உள்ளன.

போரில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்கள், உடல் உளவியல் பாதிப்புக்குள்ளானவர்கள், அரச பாதுகாப்புக் கட்டுமானங்களின் அழுத்தங்களுக்குள்ளானவர்கள், சமூக கட்டுமானங்களில் அவர்களுக்குள்ள வரவேற்பு, அவர்களுக்குள்ள அச்சுறுத்தல் என்பன மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளன.

இவர்களுக்கான நடவடிக்கையானது ஒரு நல்லிணங்க நடவடிக்கையில் முதற்கட்டமான நிவாரண நிலைக்கு முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்பது உளவளம் சார்ந்த நிபுணர்களின் கருத்தாகவுள்ளன. மேலெழுந்த வாரியாக எழும் பிரச்சினைகளுக்கு தீர்வு தேடும் நிலமையாக இருக்க முடியாது.

தற்சமயம் விஷ ஊசி விவகாரத்திற்கு வடமாகாண அமைச்சு நடவடிக்கையில் இறங்கியிருப்பதானது வரவேற்கத்தக்கதாக அமைந்தாலும் இது காலம் தாழ்த்திய போராளிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருமா என்பது கேள்விக்குரிய விடயமாக குறிப்பிடப்படுகின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் உள்ள போராளிகளின் நிலமை ஏன்ன? என்ற வினாவையும் ஏற்படுத்துகின்றன.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 23.08.2016 அன்று மூதூரிலும் , 24.08.2016, குச்சவெளியிலும் 26.08.2016 அன்று வெருகல் பிரதேசத்திலும் 28.08.2016 அன்று மாவட்ட செயலகத்திலும் நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்தறியும் செயலணியின் அமர்வுகள் இடம்பெற்றன.

இங்கு ஆயிரக்கணக்கில் மக்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்த போதும் முன்னாள் போராளிகள் விடயத்தை பலர் முன்வைக்கவே தயங்கியதை காணமுடிந்தது. போர்முடிந்து 7வருடங்கள் ஆகின்ற போதும் மக்களின் மனோநிலை, இங்குள்ள பாதுகாப்பு நடமுறை பழக்கவழக்கங்கள் மக்களை இன்னும் அந்த பழைய முறையில் இருந்து விடுவிக்கவில்லை.

ஆனாலும் மூதூரில் நடந்த அமர்வில் கலந்து கொண்ட பல போராளிகள் தமது எதிர்காலம் தொடர்பாக எடுக்க வேண்டிய நடமுறைபற்றி கூறிய கருத்துக்கள் மிகவும் முக்கியமானதாக இருந்தது.

க.வடிவேல் என்பவர் குறிப்பிடுகையில்,

நாங்கள் எமது பிள்ளைகளுடனும் குடும்ப உறவுகளுடனும் அந்நியோன்னியமாக வாழவேண்டுமாயின் அரசு எமக்கு உதவ வேண்டும். அடிப்படை வசதிகளை ஆக்கித்தர வேண்டும் அதற்கான சூழலை, அங்கீகாரத்தை ஏற்படுத்தி தரவேண்டும் நாங்கள் கீழ் மட்ட அதிகாரிகளை அணுகினால் அவர்கள் கண்டுகொள்வதில்லை. எம்மை உதாசீனம் செய்கிறார்கள். இன்னும் யுத்த சூழலையே பார்க்கிறார்கள்.

எனவே எமது பிரச்சினைகளை கையாளவல்ல அதிகாரிகளை நியமித்து விஷேட அலுவலகங்களை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

மற்றுமொரு முன்னாள் போராளி சீ.கவிதா என்பவர் குறிப்பிடுகையில்,

யுத்தம் காரணமாக எனது முள்ளந்தண்டுக்கு கீழ் பாதிக்கப்பட்டு இயக்க மி்ன்றி இருக்கின்றேன். செட்டிக்குளம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டேன்.

ஆனால் இந்த நல்லாட்சி அரச காலத்தில் வாழ்வாதாரம் மருத்துவம் அற்ற நிலையிலேயே வாழ்கின்றோம். இது போன்று இன்று வரை பேசக்கூட பயந்தவர்களாக ஆயிரக்கணக்கான போராளிகள் சிரமத்தின் மத்தியல் விரக்தியின் விழிப்பில் வாழ்கின்றோம். எனத் தெரிவித்தார்.

இவை இப்படியிருக்க மூதூரி்ல் மீழ்குடியேற்றக்கிராமத்தைச்சார்ந்த போராளி ஒருவர் கடற்படையில் பணியாற்றியவர் நீதிமன்றத்தில் இருந்து சுமார் பல தசாப்தங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டு நோய்வாய்பட்ட நிலையில் கடந்த இருவாரத்திற்கு முன்னர் ஊர் திரும்பினார்.

அவர் திரும்பும் போது மிகமோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் தனது உறவுகள் கூட மதிக்க முடியாத நிலையில் அயல் கிராமத்தவர் மூலம் சொந்த வீட்டை அடைந்துள்ளார்.

ஆனால் அங்கு அவரது தாயும் சகோதரியும் மட்டும் வசிக்கும் நிலையில், மாறாத தற்போதைய பாதுகாப்பு மாநிலையைக்கருத்தில் கொண்டு அவரை ஏற்க மறுத்து விட்டனர்.

பேசக்கூட பயந்த நிலையில் குறித்த போராளி மறுநாள் காலை அயல் ஊரவர்களின் சிறிய நிதி உதவியுடன் தனது நண்பர்கள் மூலமாவது ஒரு இல்லிடம் அமையும் என்ற எதிர்பார்ப்பில் வட மாகாணம் நோக்கிச்சென்றார்.

இவ்வாறு இவர்களின் கிழக்கு மாகாண சூழல் இன்னும் யுத்த சூழலை ஒத்ததாகவும் சாதாரணமாக தங்கி நின்மதியாக உயிர்வாழும் சூழலும் குறைந்த பட்சம் ஆயலவர்கள், சுற்றத்தார் என பேசி சிரிக்கும் அடிப்படைச்சூழலும் இன்னும் இல்லாத நிலமையில் உள்ளனர். என்பது இவர்களின் கருத்துக்கள் மூலம் அறிய முடிகிறது.

எனவே இவர்கள் சமூக மயமாதல் , அவர்களது உளவியல், உடலியில், பிரச்சினைகள், சமூக அங்கீகாரம், வாழ்வாதாரம் , என்று பல வற்றை சுமூகமாக அணுகத்தக்கவர்கள், அதற்கான சூழல் ஏற்படுத்தப்படாமை என்பது நல்லிக்கிணக்க நடமுறையில் உள்ள பெரும் சவாலான விடயமாகவுள்ளன.

எனவே இங்கு போராளி ஒருவர் குறிப்பட்டது போன்று இந்த நாட்டின் நல்லாட்சிக்காக உழைத்தவர்கள், தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக சிதைந்தவர்கள் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை அணுக விஷேட அலுவலகம் ,பயிற்றப்பட்ட அதிகாரிகள் , செயற்திட்டங்கள் , வாழ்வாதாரங்கள் ஏன்பன திட்டமிடப்பட்டு ஏற்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அந்தவகையில் முற்றிலும் நெருக்கடியில் உள்ள போராளிகளின் புனர்வாழ்வு சமூக மயமாக்கல் என்பன மிக நிதானமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். அதற்கான ஏந்த முன்னெடுப்பையும் காணமுடியவில்லை என்பது முக்கியமான விடயமாகும்.

SHARE