சுவாதி கொலை வழக்கு குறித்து அவதூறு பரப்பிய திலீபன் சிறையில்…

231

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)

சுவாதி கொலை வழக்கில் சிலரை தமிழக போலீஸார் திட்டமிட்டு தப்பிக்க வைப்பதாகவும் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன்.

கடந்த சில மாதங்களுக்கு முன், தேசியக் கொடியை எரித்த சர்ச்சையில் சிக்கிய திலீபன், போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக இயக்குனரும், பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவருமான கருப்பு முருகானந்தம் மீது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக திருவாரூர் போலீஸார், கடந்த 25-ம் தேதி, திலீபன் மகேந்திரனை கைதுசெய்தனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்ட திலீபன் மகேந்திரனை, வரும் செப்டம்பர் 9 வரை திருச்சி மத்திய சிறையில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆனால், கைது செய்யப்பட்ட மறுநாளே திருவாரூர் நீதிமன்றத்தில் திலீபனுக்கு ஜாமீன் கிடைத்தும்கூட சில சட்ட நடைமுறைகளால் அவர் வெளியே வருவதில் தாமதம் ஆகிறது.

இதுகுறித்து வழக்கறிஞர் கம்ருதீன், ‘‘சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் இருந்தே திலீபன் மகேந்திரன், தமிழச்சி போன்றவர்கள் போலீஸார் உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடுவதாக சமூக வலைத்தளங்களில் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

திலீபன் தனது பேஸ்புக் பக்கத்தில் பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் சிலரது பெயர்களைக் குறிப்பிட்டு, சுவாதி கொலையில் அவர்களுக்குத் தொடர்பிருப்பதாகக் கூறியுள்ளார்.

கருப்பு முருகானந்தம் கொடுத்த புகாரின் பேரில், ஆகஸ்ட் 25 மதியம், சென்னை அம்பத்தூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார் திலீபன்.

ஆனால், போலீஸார் அவரை வேளாங்கண்ணியில் கைது செய்ததாகச் சொல்லி வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

சிறையில் இருக்கும் அவருக்கு, சட்ட உதவிகள் வழங்குமாறு நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவரை கடந்த சனிக்கிழமை சிறையில் சந்தித்து விட்டு வந்தேன்.

அப்போது அவர், ‘என்னை கைதுசெய்வதற்கு சில நாட்களுக்கு முன் ராம்குமார், தாயார் புஷ்பம், வழக்கறிஞர்களை சந்தித்து சில தகவல்களை விளக்கி கூறியதோடு இந்த வழக்கை காவல்துறை சரியாக விசாரிக்கவில்லை என சொல்லிவிட்டு வந்தேன்.

அதன்பிறகுதான் ராம்குமார் தாயார் தரப்பில் சி.பி.ஐ விசாரணை கோரி வழக்குப்பதிவு செய்துள்ளார்கள். இந்த நிலையில்தான் என்னையும் கைது செய்துள்ளார்கள்’ எனக் கூறினார்.

கடந்த திங்கட்கிழமை மாலை, சிறையில் திலீபனை சந்தித்தேன். அப்போது, அவர், ‘கடந்த சனிக்கிழமை இரவிலிருந்து தன்னை மனநிலை சரியில்லாதவர்களை அடைக்கும் பிளாக்கில் அடைத்து வைத்திருப்பதாகவும் இராத்திரி பகலாக தனிமைச் சிறையில் வைத்திருப்பதாகவும் அங்கே காற்று வசதியோ, மின் விசிறியோ, மின் விளக்கோ இல்லை எனவும் போர்த்திக்கொள்ள போர்வை கூட கொடுக்கவில்லை எனவும் திலீபன் கூறினார்.

இதுகுறித்து சிறை அலுவலரிடம் கேட்டபோது, ‘மனநல ஆலோசகரின் அறிக்கைப்படிதான், திலீபனின் பாதுகாப்புக்காக இப்படி அடைத்து வைத்திருப்பதாக சொன்னார்கள்.

இவர்கள் செயல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. தனிமைச் சிறையில் அடைத்திருப்பது மிக மோசமான மனித உரிமை மீறல்.திலீபன் போட்ட பதிவுகள் குறித்து தமிழக போலீஸாரோ, விசாரணை அதிகாரிகளோ ஏதும் மறுப்பு சொல்லாத நிலையில் குற்றச்சாட்டு எழுப்பிய ஒருவரை கைதுசெய்து சிறையில் அடைப்பதை பார்த்தால் போலீஸார் எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் எனத் தெரிகிறது என்றார்.

திலீபன் மகேந்திரன் சிறையில் மனநோயாளிகள் செல்லில் அடைக்கப்பட்டிருக்கிறார் என எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரனிடம் கேட்டோம்.

வழக்கமாக சிறைக்குள் கொண்டுவரப்படும் எந்த கைதிக்கும் சிறையில் இருக்கும் மனநல ஆலோசகர் பரிசோதனை செய்வார். அவர்கள் அறிக்கைப்படி, பதற்றமான சூழலில் உள்ளவர்களைத் தனிமை சிறையில் வைத்திருப்போம். அடுத்தடுத்த கண்காணிப்புகளுக்குப் பிறகு அவர்களை வழக்கமான பிளாக்குக்கு மாற்றுவோம். இதுதான் நடைமுறை.

எப்போதும் அந்த பிளாக்கில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள். அப்படித்தான் திலீபன் மகேந்திரனை ஆய்வு செய்த டாக்டர், அவர் இயல்பான நிலையில் இல்லை. பதற்றமாக இருந்தார். வார்த்தைகள் இயல்பான நிலையில் இல்லை. அதனால் அவரை அப்படி தங்க வைக்க வேண்டியது அவசியமானது’ எனச் சான்றளித்தார்.

இப்போது திலீபன் இயல்பாக இருக்கிறார். பிரச்சினை எதுவும் இல்லை என்றார்.

SHARE