மலேசிய தாக்குதலின் பின்னணியில் கருணா, கே.பி உள்ளனரா என சந்தேகம்!

239

dcp64564464

மலேசியாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோர் செயற்பட்டுள்ளனரா என்பது பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது என டிஜிட்டல் உட்கட்டுமான வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,

தமிழ் புலம்பெயர் அமைப்பு எனக் கூறிக்கொண்ட சில தரப்பினரின் செயற்பாடுகளின் பின்னணியில் கருணா, கேபி ஆகியோரின் மறைகரம் இருந்திருக்கலாம்.

மஹிந்த ராஜபக்ச என்ற முன்னாள் ஜனாதிபதி மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்தார். அவருடன் ஓர் பிரதிநிதிகள் குழுவொன்றும் சென்றுள்ளது.

இந்தக் குழுவை ஒர் நல்ல குழுவாக அடையாளப்படுத்தி விட முடியாது.மலேசியா விஜயம் செய்திருந்த குழுவில் இல்லாத பிரச்சினைகளை உருவாக்கக்கூடிய தரப்பினரும் உள்ளடங்கியிருந்தனர்.

ராஜபக்சக்கள் உள ரீதியாக பலவீனமடைந்துள்ளனர்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்காது மஹிந்த மலேசியாவிற்கு விஜயம் செய்திருந்தார்.

மஹிந்த மலேசியா சென்று அங்கும் பிரச்சினை ஏற்படுத்த முயற்சித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மலேசிய அரசாங்கம் எதிர்காலத்தில் இது குறித்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கின்றேன் என ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கே.பி மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், கருணாவிற்கும் மலேசிய தொடர்புகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE