செப் – 7 முதல் இணைந்தநேர அட்டவணை

241

 

யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் தலைமைக்காரியாலயத்தில் இணைந்த நேர அட்டவணை அமுல்படுத்துவது தொடர்பாக விசேட கலந்துரையாடல் இன்று (05.09.2016) முற்பகல் 11மணியளவில் நடைபெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலானது அமைச்சர் டெனிஸ்வரனின் தலைமையில் அமைச்சின் செயலாளர், வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய முகாமையாளர், பொறுப்புவாய்ந்த உயர் பொலிஸ் அதிகாரிகள், வடமாகாண தனியார் பேருந்து உரிமையாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் நிருவகக்குழு உறுப்பினர்கள், ஐந்து மாவட்டங்களினதும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிருவாக உறுப்பினர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வடமாகாண பொறுப்பதிகாரி மற்றும் அலுவலர்கள், இலங்கை போக்குவரத்து சபையின் நேரக்கணிப்பாளர்கள், தனியார் போக்குவரத்துத்துறையின் நேரக்கணிப்பாளர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளர்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் ஒன்றுகூடி போக்குவரத்து சேவையில் காணப்படுகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்துள்ளனர்.

குறித்த கலந்துரையாடலின்போது அமைச்சர் அவர்கள் எமது மாகாணத்தில் இணைந்த நேர அட்டவணை பின்பற்றப்படாமையினால் பல்வேறு அசௌகரியங்களை பொதுமக்களும் பிரயாணிகளும் எதிர்நோக்கியிருக்கின்றார்கள். குறிப்பாக ஐந்து மாவட்டத்திலும் வீதி விபத்துக்களினால் ஏதோவொரு மூலையில் நாளாந்தம் பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை இழந்து வருகின்றோம், அண்மையில் கூட வீதி விபத்தினால் யாழ் மாவட்டத்தில் ஒரு வைத்தியரை இழந்து நிற்கின்றோம். இவ்வாறான இழப்புக்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன குறிப்பாக கண்மூடித்தனமான போட்டித்தன்மை, ஒருசில சாரதிகளின் அசமந்தப்போக்கு, ஒரு பேருந்தை முந்திச்செல்ல வேண்டுமென்ற நோக்கில் வீதி ஒழுங்கு விதிகளை பின்பற்றாமை, ஒருங்கிணைந்த நேர அட்டவணை ஒன்று இல்லாமை என்பன முக்கிய காரணிகளாக காணப்படுகின்றது. இவற்றினை சீர்செய்து எமது பொதுமக்களுக்கு தரமானதும் பாதுகாப்பானதுமான சேவையினை வழங்கவேண்டியது பொறுப்புவாய்ந்த அதிகாரிகளின் கடமையாகும் எனவும் தெரிவித்திருகின்றார்.

அந்தவகையில் எதிர்வரும் 7ம் திகதிமுதல் வடமாகணத்தில் இருக்கின்ற ஐந்து மாவட்டங்களுக்கும் இடையிலான இணைந்த நேர அட்டவணையை அமுல்படுத்த தீர்மானித்திருப்பதாகவும், அதன்பொருட்டு வடமாகாணத்தின் முக்கிய 21 இடங்களில் மேற்படி விடயத்தினை கண்காணிப்பதற்காக விசேட ஒழுங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் மேற்படி விடயத்தினை கண்காணிக்கப்போகும் உத்தியோகத்தர்கள் அனைவரும் இன்றைய தினம் வருகைதந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேரம் கண்காணிக்கப்படும் இடங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் நேரக்கணிப்பாளர்களும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் நேரக்கணிப்பாளர்களும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக்கணிப்பாளர்களும் சேவையில் ஈடுபடுமாறு அமைச்சர் அவர்கள் பணிப்புரை வழங்கியியதோடு, மேற்குறிப்பிட்ட 21 இடங்களிலும் இவர்களுக்கு மேலதிகமாக போக்குவரத்து பொலிசார் சட்டத்தினை அமுல்படுத்தும் பொருட்டு சேவையில் ஈடுபடவுள்ளனர் என்பதனையும் அதற்கும்மேலதிகமாக போக்குவரத்து பொலிசாரும் உயர் அதிகாரிகளும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்களென அமைச்சர் அவர்கள் தெரிவித்திருகின்றார்.

மேலும் குறித்த இணைந்த நேர அட்டவணையை பின்பற்றாமல் சேவையில் ஈடுபடுகின்ற பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி உரிய சட்டநடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறையினருக்கு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக அமைச்சர் அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. அதுமட்டும் அல்லாது இதனை மீறுகின்ற சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளர்களுக்கு  எதிராக பிரிவு 43 இன் கீழ் நீதிமன்றத்தின் மூலம் ரூபா 10000 இற்கு குறையாத தண்டப்பணம் அல்லது இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது அவை இரண்டையும் வித்திக்ககூடிய ஏற்பாடு இருப்பதனை அமைச்சர் அவர்கள் பொலிசாருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த இணைந்த நேர அட்டவணையானது எதிர்வரும் 7ம் திகதியிலிருந்து ஒருமாத காலத்திற்கு பரிச்சார்த்தமாக அமுல்படுத்தப்படும் என்றும் இக்காலப்பகுதியில் பல்வேறு களஆய்வுகள் மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதனடிப்படையில் ஒருமாத காலப்பகுதியின் பின்னர் சம்மந்தப்பட்ட சேவை வழங்குனர்களை உள்ளடக்கியதான விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு சாதக பாதக நிலைகள் கருத்தில் எடுக்கப்பட்டு புதியதும் இறுதியானதுமான இணைந்த நேர அட்டவணை தீர்மானிக்கப்படும் என்பதனையும் அமைச்சர் அவர்கள் விசேட விதமாக சுட்டிக்காட்டி இருக்கின்றார்.

மேலும் சேவை வழங்குனர்கள் இலாபத்தை மட்டும் பாராமல் போக்குவரத்து சேவையில் பொதுமக்களின் பாதுகாப்பையும் அவர்களது சௌகாரியத்தையும் முக்கியமாக கருத்தில் எடுத்து சேவை வழங்கவேண்டும் என்பதனை மிகவும் ஆணித்தரமாக சுட்டிக்காட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது வழி அனுமதிப்பத்திரத்தின் நிபந்தனைகள் மற்றும் கடப்பாடுகளை சாரதி, நடத்துனர் மற்றும் உரிமையாளர்கள் சரியாக பின்பற்றுதல் அவர்களது முதன்மையான கடமை என்பதனை சுட்டிக்காட்டியதோடு மேற்படி விடயங்கள் மீறப்படும் போது உரிமையாளர்கள் தமது அனுமதிப்பத்திரத்தினை இழக்க நேரிடுமெனவும் இலங்கை போக்குவரத்து சபையினராக இருப்பின் அவ்வீதியினால் செல்வதற்கு அனுமதி மறுக்கப்படுமெனவும் தெரிவித்திருகின்றார்.

மேலும் சாரதி நடத்துனர்கள் வீதி ஒழுங்கு விதிமுறைகளையும் விதிக்கபடுகின்ற ஒழுங்குவிதிகளையும் சரியாக கடைப்பிடித்து நடப்பீர்கள் என்று சொன்னால் மிகவிரைவாக வடமாகணத்தில் போக்குவரத்து தொடர்பாக இருகின்ற பல்வேறு பிரச்சனைகளை ஒழிக்கமுடியும் என்பதோடு எமது மக்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதிப்படுத்த முடியும் என்பதனையும் தெரிவித்திருகின்றார்.

மேலும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மனம் வைப்பின் விபத்துக்களை அதிகளவில் குறைத்துக்கொள்ள முடியும் என்பதோடு பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையினை வழங்குவதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார். மேலும் வீதி விபத்துக்களில் இறக்கின்றவர்கள் தங்களது குடும்பத்தினராக இருப்பின் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதனையும் அதன் வலியினை தங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா என்பதனையும் சுட்டிக்காட்டியதோடு, வீதிகளில் பயணிப்போர் மற்றும் பேருந்துகளில் உங்களை நம்பி ஏறுகின்ற அனைவரும் எமது பொதுமக்கள், உங்களது உறவுகள் என்ற அடிப்படையில் அவர்களது உயிர்களை பாதுகாக்க வேண்டியதும் பத்திரமாக உரிய இடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதும் உங்களது தலையாய கடமை என்பதை மனதில் வைத்து செயற்பட வேண்டுமெனவும் சாரதிகளிடம் அன்பாக கேட்டுநிற்பதோடு, எத்தனையோ சாரதிகள் விபத்துக்களினால் உயிரிழந்ததன் பின்னர் அவர்களது குடும்பம் அனாதரவாக பரிதவித்துக்கொண்டு இருப்பதை சாரதிகள் கவனத்தில் எடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

unnamed (3)

SHARE