இலங்கையின் வடக்கில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான அச்சுறுத்தல் செயற்பாடுகள் வந்துள்ளன. எனவே வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினை நிலைகொள்ளச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தூய்மையான ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விஜயத்தின் போது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் நடமாட்டத்தினை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் மூன்று மாதங்களுக்குள் அந்த செயற்பாட்டினை விரைந்து முன்னெடுப்பதாக வாக்களித்துள்ளார்.
ஆனால் தெற்கில் இனவாதிகளினால் இராணுவத்தை அகற்றும் செயற்பாடுகளுக்கு தடை ஏற்படக்கூடும், என்பதனால் படிப்படியாக அந்தச் செயற்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கைக்கு வடக்கு பகுதியிலிருந்தே 80 வீதமான எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன. எனவே வடக்கில் இராணுவம் நிலைகொள்ள வேண்டியது மிக அவசியமானது.
அத்துடன் வடக்கில் மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என்றார்.