தயா மாஸ்ரரின் குற்றப்பத்திரிகை வலுவற்றது – சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்

240

வவுனியா மேல் நீதிமன்றத்தில் தயா மாஸ்ரரின் வழக்கு இன்று 06-09-2016 மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தயா மாஸ்ரரின் சார்பாக ஆஜராகிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டு மீள திரும்பிவராத காரணத்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று மேல் நீதி மன்றத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என அரச சட்டத்தரணி தெரிவித்ததையடுத்து வழக்கு 28-09-2016 ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தயாமாஸ்ரர் மீது சட்டமா அதிபர் திணைக்களகத்தினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையானது வலுவற்றது என்ற வாதத்தை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக இன்று சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் வழக்கு விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு மத்தியில் மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் பயங்கரவாத செயல்களையும் குறித்த பயங்கரவாத செயல்களையும் தடுப்பதற்கான விதிமுறைகள் என்று அவசரகால சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த விதிகள் 2006 ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் திகதி கொண்டுவரப்பட்டபோது இந்த விதிகள் அடிப்படை சட்டவிதிகளுக்கு முரணானது அரசியல் அமைப்புக்குகூட முரணானது என்ற கருத்துக்களை உள்ளுரிலும், சர்வதேசத்திலும் குரல் எழுப்பியிருந்தார்கள். ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளரினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவும் தமது நீண்ட அறிக்கையிலே இது சாதாரண சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

அந்தவேளையில் கடந்த அரசாங்கம் கூட இந்த விதிகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யமாட்டோம் என ஊடகவியலாளர்களிடம் வாக்குறுதி கொடுத்திருந்தது. ஏனெனில் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர் என சந்தேகிக்கப்படும் ஒருவரோடு தொடர்பு வைத்திருந்ததும் அந்த விதிமுறைகளின் கீழ் குற்றமாக இருந்தது. சட்டத்தரணிகளுக்கு எதிராககூட வழக்கு தாக்கல் செய்யக்கூடிய முறையில் அது உருவாக்கப்பட்டிருந்தது.

அப்படியான இதுவரையும் உபயோகிக்காத விதிமுறைகளை திடீரென்று இன்றைய காலகட்டத்தில் புதுவழக்கை தாக்கல் செய்து குற்றச்சாட்டை முன்வைத்தது விசித்திரமானது.

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளில் அரசியல் கைதிகளாக உள்ளவர்களை விடுதலை செய்வதற்கு சட்டமா அதிபர் நடவடிக்கை எடுக்கின்றார். அதனை மீளாய்வு செய்கின்றார். முடிந்தவரையில் அவர்களை விடுவிப்பார் என்றெல்லாம் அரசாங்கம் வாக்குறுதிகளை சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் புதிதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குகளை தாக்கல் செய்வது ஒரு விடயம் அதிலும் விசேடமாக இப்படியான விதிமுறைகளுக்கு கீழே இந்த வழக்கை தாக்கல் செய்தது என்ன காரணம் என்பது ஒரு புரியாத புதிராக இருக்கின்றது.

எனவே அதற்கு எதிராக அடிப்படை ஆட்சேபனையை எழுப்பும் முகமாக இன்று நீதிமன்றத்திற்கு வந்திருந்தேன். ஆனால் அரச சட்டத்தரணி சட்டமா அதிபர் இந்த வழக்கு சட்டக்கோவையையும் மற்ற வழக்கு கோவைகளையும் தன் கவனத்திற்கு அனுப்புமாறு எடுத்துவிட்டார் என்றும் வழக்கு கோவை நீதிமன்றத்தில் இல்லை என்று கூறிய காரணத்தால் வழக்கு மீண்டும் செப்டெம்பர் 28 ஆம் திகதிக்கு போடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் இந்த அடிப்படை ஆட்சேபனையை அதாவது இந்த குற்றப்பத்திரிகை சட்டவலு அற்றது ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்படவேண்டும் என்கின்ற ஆட்சேபனையை நீதிமன்றத்தில் வாதமாக வைப்பேன் என தெரிவித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் பிரதேசத்தில் இருந்த பொதுமக்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வரவிடாமல், அரச விரோதச் செயற்பாட்டாளர்களாகிய விடுதலைப்புலிகளுக்கு கேடயமாகப் பயன்படுத்துவதற்காக அவர்களுடன் இணைந்து தடுத்ததாக தயா மாஸ்டர் மீது குற்றம் சுமத்தி வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் ஆஜராகிய தயா மாஸ்ரருக்கு 10-08-2016 பிணை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவலும் படங்களும்:- காந்தன்

unnamed

SHARE