பேராறு நீர்த்திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிக்கு மாற்றீடாக காணி வழங்குமாறு தெரிவித்து விவசாயிகள் கவனயீர்ப்பு ஊர்வலம்

230
வவுனியா பண்டாரப்பெரிய குளத்தில் 150 வருட காலமாக செய்கை பண்ணிய விவசாயிகளின் காணிகள் பேராறு நீர்த்தேக்கத்திற்காக 2007 இல் சுவீகரிக்கப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிக்கு மாற்றீடாக காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு காணி வழங்கப்பட்டபோதிலும் அது விவசாயம் செய்யக்கூடிய நிலையிலோ அல்லது சுவீகரிக்கப்பட்ட காணிக்கு ஒப்பானதாக இல்லை என தெரிவித்து, இன்று 07-09-2016 வவுனியா பிரதேச செயலகத்தின் வாயிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம்வரை ஊர்வலமாக வந்த விவசாயிகள் அமைப்பினர் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா நகருக்கான நீர் விநியோகத்திட்டம் பேராறு ஆற்றை குறுக்காக அணைகட்டி ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் 2007 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்டது. 167 ஏக்கர் விவசாய காணிகள் விவசாயிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் அரச அதிகாரிகளின் அழுத்தத்தின் பேரில் சுவீகரிக்கப்பட்டது.
கமக்கார அமைப்புக்களும், பிரதேச செயலாளரும், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினுடைய ஒரு முத்தரப்பு ஒப்பந்தம் ஒன்று மேற்கொண்டிருந்தனர். அந்த ஒப்பந்தத்தில் மக்களிடம் சுவீகரிக்கப்படுகின்ற வயல் காணிகளுக்கு சமமான வயல் காணிகளை ஒரு வருடத்திற்குள் புதிய இடத்தில் மாற்றுக் காணி வழங்குவதாக உறுதி அளித்த நிலையில் ஒப்பந்தம் கைச்சாத்தாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் இதுவரை விவசாயிகளுக்கான மாற்று காணிகள் வழங்கப்படவில்லை.
கடந்த மாதம் வெறும் 37 ஏக்கர் காணிகள் மாத்திரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அந்தக்காணிகள் விவசாயம் செய்ய ஏற்றதாக இல்லை. பெரும்போக செய்கை நெருங்கும் இந்த நேரத்தில் நீர் வடிகாலமைப்புச் சபை விவசாயிகளை காணிகளை துப்பரவு செய்து விவசாயம் செய்யுமாறு கோரியள்ளது என குறிப்பிட்டனர். ஆகவே அது எந்தவகையிலும் நியாயமில்லை ஏற்கனவே நாங்கள் ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளோம். ஒப்பந்தத்தின் பிரகாரம் விவசாயிகளிடம் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு சமனாக காணிகள் வழங்கப்படவேண்டும் அல்லாவிடில் சட்டரீதியாகவும், போராட்டம் மூலமாகவும் பிரச்சினைகளை எதிர்கொள்வோம் என தெரிவித்தனர்.
தகவலும் படங்களும்:- காந்தன்
unnamed (1)
unnamed (2)
unnamed (3)
unnamed (4)
unnamed (5)
unnamed (6)
SHARE