
பாதுகாப்புப் படை, பொலிஸ் சேவை மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியவற்றுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்காலத்தில் நாடளாவியரீதியில் உள்ள அனைத்துப் பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி தெரிந்த இரு பொலிஸ் அதிகாரிகளையாவது நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்கள் இல்லாமை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
பாதுகாப்பு பிரிவில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகள் இருக்கவேண்டும். அதனால் தான் வடக்கு, கிழக்கிலுள்ள தரவுகளை சரியான முறையில் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையில் முதலாவது இராணுவத் தளபதியாக தமிழர் ஒருவரே இருந்தார். அதேபோல் பொலிஸ் திணைக்களத்திலும் தமிழ் உயர் அதிகாரிகள் இருந்திருக்கின்றனர்.
1978 ஆம் ஆண்டின் பின்னர்தான் இதில் பிரச்சினை ஏற்பட்டது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது எழுப்பப்பட்ட வினா ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் இந்த தகவல்களை தெரிவித்திருக்கின்றார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
பாதுகாப்புப் படைகளிலும் பொலிஸ் திணைக்களத்திலும் ஆரம்பகாலங்களில் பெருமளவான தமிழ் அதிகாரிகள் இருந்தபோதிலும், 1983ம் ஆண்டின் பின்னர் அந்த தொகை குறைவடைந்தது.
யுத்தமும் இனவாத யுத்தமாக அடையாளப்படுத்தப்பட்டமையினால் தமிழர்கள் பாதுகாப்பு சேவைகளில் இணையவில்லை. ஆளணித்தேவையும் ஏனைய பகுதிகளிலிருந்து நிரப்பப்பட்டது.
பொலிஸ் நிலையங்களில் ஏராளமான தமிழ் பேசும் முஸ்லிம், தமிழ் மக்கள் இருந்தனர். தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை பாதுகாப்பு படைகளுக்கும் பொலிஸ் சேவைக்கும் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தமிழ் பேசும் 216 உத்தியோகத்தர்கள் பொலிஸ் கான்ஸ்டபிள்களாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். வடக்கிலிருந்து 151 பேரும் கிழக்கிலிருந்து 57 பேரும் இவ்வாறு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
வடக்கு, கிழக்கிலிருந்து அதிக எண்ணிக்கையிலானோரை பொலிஸ்சேவையில் இணைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மலையகப் பகுதியைப் பொறுத்தவரையில் இந்த சேவையில் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்கு கல்வித்தகுதிப் பிரச்சினை காணப்படுகின்றது.
அவ்வாறு போதிய கல்வி அறிவுடையவர்களும் ஏனைய தொழில்களையே தேடிச் செல்கின்றனர். 2015ம் ஆண்டில் சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு 90 தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
இவ்வாறு வடக்கு, கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் எதிர்காலத்தில் அதிகளவில் இணைத்துக் கொள்ளப்படுவர் என்றும் பிரதமர் கூறியிருக்கின்றார்.
கடந்த மூன்று தசாப்தகாலமாக நாட்டில் இடம்பெற்று வந்த கொடூர யுத்தமானது தமிழ் மக்களை பெரிதும் வாட்டி எடுத்தது. யுத்தம் ஆரம்பமான பின்னர் படைத்தரப்பிலும் பொலிஸ் திணைக்களத்திலும் பெருமளவான தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ஆயுதப் போராட்டம் வளர்ச்சி பெற்றதையடுத்து இனவாத ரீதியில் யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. தமிழர்கள் அனைவரும் புலிகள் என்ற தோரணையிலேயே மாறிமாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் செயற்பட்டு வந்தன.
1956ம் ஆண்டு தனி சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதுடன் இனவாத அரசியல் மேலோங்கியது.தமிழ் மக்கள் இரண்டாந் தரப்பிரஜைகளாக நடத்தப்படும் நிலை உருவானது.
கல்வியில் தரப்படுத்தல் அதிகரித்தது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் ஜனநாயக தலைமைகள் அஹிம்சை வழியில் போராட்டங்களை நடத்தி தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்ட முயன்ற போதிலும் அந்த முயற்சிகள் எதுவும் பயனளிக்கவில்லை.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என பல உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்ட போதிலும், அவை எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தமிழ் அரசியல் தலைமைகளின் ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்டதையடுத்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவ்வாறு ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் அரச படைகளிலும் பொலிஸ் திணைக்களத்திலும் சேவையாற்றிய தமிழ் உத்தியோகத்தர்களை துரோகிகளாகப் பார்க்கும் நிலை உருவானது.
இதனால் தான் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு தரப்பிலிருந்து ஒதுங்கும் நிலை ஏற்பட்டது. இதனைவிட படைத்தரப்பில் கடமையாற்றிய தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் படைத்தரப்பினராலேயே சந்தேகக் கண்ணோடு பார்க்கும் நிலையும் உருவானது.
இத்தகைய சூழ்நிலையால்தான் படைத்தரப்பிலோ அல்லது பொலிஸ் திணைக்களத்திலோ தமிழ் உத்தியோகத்தர்கள் கடமையாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலை தொடர்ந்தமையால் இராணுவம் என்பது சிங்களவர்களை மட்டுமே கொண்ட. ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டது.
பொலிஸ் திணைக்களத்தில் சில தமிழ் அதிகாரிகள் கடமையாற்றியபோதும் அவர்களும் வெளித்தெரியாத ஒருவராகவே பணியாற்றி வந்தனர்.தற்போது யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு விட்டது.
நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் படைத்தரப்பு மற்றும் பொலிஸ் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம் என்பவற்றுக்கு விகிதாசாரத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.
தற்போதைய நிலையில் நாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றனர்.வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள பொலிஸ் நிலையங்களில் கூட தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றது.
இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸ் நிலையங்களில் தமது தேவைகளை உரிய வகையில் நிறைவேற்ற முடியாது திண்டாடிவருகின்றனர். பொலிஸ் நிலையத்திற்கு செல்லும் ஒருவர் தனது முறைப்பாட்டை தமிழில் செய்ய முடியாத நிலைமையும் காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான சூழலில் அந்த மக்கள் எவ்வாறு தமது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும். என்ற கேள்வி எழுகின்றது.இதேபோல், தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இல்லாமையினால் வடக்கு, கிழக்கிலுள்ள நீதிமன்றங்களிலும் விசாரணைகளை மேற்கொள்வதில் பெரும் சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
நீதிமன்றப் பணிகள் தமிழில் நடைபெறுகின்ற போது பொலிஸார் சிங்களத்தில் அறிக்கை சமர்ப்பிப்பதனால் அதனை மொழி பெயர்க்க காலம் எடுக்கின்றது. இவ்வாறு தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினால் பல்வேறு சிரமங்கள் எதிர்நோக்கப்படுகின்றன.
சிறைச்சாலைகளிலும் தமிழ் பேசும் உத்தியோகத்தர்கள் போதியளவு நியமிக்கப்படவேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள சிறைச்சாலைகளில் தமிழ் பேசும் கைதிகளே அதிகளவு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தமது மொழியில் பேசுவதற்கு ஏற்றவகையிலும் தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கும் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியுள்ளது.
இதுவரை காலமும் பொலிஸ் சேவையிலோ அல்லது சிறைச்சாலைகள் திணைக்களத்திலோ வேலை வாய்ப்புக்களைப்பெறும் விடயத்தில் தமிழ் பேசும் இளைஞர், யுவதிகள் அக்கறை காண்பிக்கவில்லை.
ஆனால் தற்போது அந்த நிலை மாறிவருகின்றது.எனவே, விகிதாசாரத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கமானது உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
இதேபோல், பொலிஸ் . சேவையில் தமிழ் பேசும் உயர் அதிகாரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது.
இந்தப் பதவிகளுக்கு புதியவர்களை சேர்த்துக்கொள்ளும் வரை ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரிகளை ஒப்பந்த கால அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதுவும் வரவேற்கத்தக்கதாக அமையும்.