ஐக்கிய தேசியக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி

228

எந்தவொரு வெளிநாட்டு சக்திக்கும் நாட்டின் இறைமையிலும் மக்களின் சுதந்திரத்திலும் கைவைப்பதற்கு இடமளிக்கப்படாது என்பதே இன்று ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினதும் ஒரே கோசமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அக்கோசத்தின் அடிப்படையில் ஒரே மேடையில் இருந்துகொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் முடியும் என்றும் குறிப்பிட்டார்.  (10) பொரல்லை கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 70 வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இதனைத் தெரிவித்தார்.

புதியதோர் நாட்டில் முன்னேரிச் செல்ல எண்ணுபவர்கள் வாருங்கள் என்ற தொனிப்பொருளின் கீழ் முற்பகல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரனில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் அக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா ஆரம்பமானது. இந்த நாட்டின் 62 இலட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் புதிய அரசாங்கத்திற்கு தங்களது வாக்குகளை அளித்தது நாட்டு மக்களுக்கு முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயங்களுக்கேயாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இன்று இந்நாட்டின் ஜனாதிபதி என்றவகையிலும் பிரதான மக்கள் சேவகன் என்றவகையிலும் அவ்விடயங்களை நிறைவேற்றுவதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் குறிப்பிட்டார். 2015 ஜனவரி மாதம் 08 ஆம் திகதி இந்நாட்டு மக்கள் நிராகரித்த ஊழல் மோசடிகள், கொள்ளை, வீண்விரயங்கள் மற்றும் குடும்ப ஆதிக்கம் என்பவை மீண்டும் இந்நாட்டில் தலைதூக்காத வகையில் ஜனநாயகமும் நல்லிணக்கமும் பலமான நிலையில் உள்ள ஒரு நாட்டைக்கட்டியெழுப்புவதற்கு இணக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதிகாரம் இல்லாத நிலையில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பல்வேறு எளிமையான விடயங்களைக் குறிப்பிட முடியும் என்றபோதும் நாட்டின் பொறுப்புகளை வகிப்பவர்கள் என்றவகையில் நாட்டுக்குத் தேவையான எல்லா மாற்றங்களையும் கொண்டுவருவதற்கு புதிய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் ஆகிய எல்லா இனங்களுக்கும் நியாயமானதும் எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான ஒரு அரசியல் யாப்பை நாட்டுக்கு முன்வைப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இதன் போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட முடியும் என்றும் பதிய அரசயலமைப்பு தொடர்பாக மக்களை பிழையாக வழிநடாத்தும் போலிப் பிரசாரங்களுக்கு ஊடகங்கள் இடமளிக்கக் கூடாது என்றும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2016.09.10

 

SHARE