மூத்த தமிழ் செய்தியாளர் கே ஜி மஹாதேவா காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமை சென்னையில் தமது 76 வயதில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியான ‘ஈழநாடு’ செய்தித்தாளின் சிரேஸ்ட செய்தி ஆசிரியராக மஹாதேவா கடமையாற்றினார்.
மட்டக்களப்பை சேர்ந்த மஹாதேவா, மலையகத்தில் இருந்து 1960களில் வெளியான ‘செய்தி’ என்ற செய்தித்தாளிலும் பணியாற்றினார்.
இதன்பின்னரே அவர் யாழ்ப்பாண ஈழநாடு செய்தித்தாளுடன் இணைந்தார்.
இந்த செய்தித்தாள், வாழைச்சேனை கடதாசி ஆலையின் தலைவர் கே சி தங்கராஜாவினால் 1958ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டபோது, ஈழநாடு செய்தியகமும் எரிக்கப்ப்பட்டது.
எனினும் மஹாதேவாவும் அவரது குழுவினரும் இணைந்து ஈழநாடு செய்தித்தாளை மீண்டும் வடக்கு கிழக்கு வாசகர்களுக்காக வெளியிட்டனர்.
செய்தியாளர் தரப்பில் மஹான் என்ற அழைக்கப்பட்ட மஹாதேவா, இளம் செய்தியாளர்களையும் ஊக்குவித்து வந்தார்.
ஈழநாட்டில் அவரது ‘இப்படியும் நடக்கிறது’ என்ற பகுதி வாசகர்கள் மத்தியில் செல்வாக்கைபெற்றிருந்தது.
இறுதிக்காலத்தில் தமிழகம் திருச்சியில் வாழ்ந்துவந்த அவர், இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் வெளியான தமிழ் செய்திதாள்களில் பங்களிப்பை செய்துவந்தார்.
இந்தநிலையில் அவரின் இறுதிக்கிரியை இன்று திருச்சிராப்பள்ளியில் இடம்பெறுகிறது.