தற்போதைய அரசு உலகில் உள்ள ஏனைய நாடுகளின் மனங்களை வென்றுள்ளதே தவிர வெளிநாட்டு முதலீடுகளை இவர்களால் பெறமுடியாது போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசின் அத்தனை தவறுகளுக்கும் தம்மீது குற்றஞ்சுமத்தப்படுவதாகவும், தன்னுடைய ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பத்தரமுல்லயில் கூட்டு எதிர்கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தன்னுடைய ஆட்சியில் பொதுமக்கள் ஆதரவானது தேர்தல்கள் மூலம் கண்டறியப்பட்ட போதும் தற்போதைய அரசு தேர்தல்களில் இருந்து தப்பி ஓடுவதோடு மட்டுமின்றி, கூட்டங்களுக்கு மக்களை அச்சுறுத்தி அழைத்து வந்து தமது பொதுமக்கள் ஆதரவை நிரூபிக்க முயல்வதாகவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கூட்டு எதிர்கட்சியின் ஒரே நோக்கம் திகதி குறிப்பிடப்படாமல் பிற்போடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை பெற்றுக்கொள்வதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.