என்னுடைய நீதித்துறைப் பயணம் தொடங்கியது இந்த மட்டக்களப்பில் தான். சிறையில் மறியலில் இருந்த மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றவர்களை பிணையில் விடுவித்ததற்காக நான் சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டேன்.
7 மாதங்களே என்னை இங்கிருக்க விட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் இரவு மட்டக்களப்பில் ஆரம்பமான தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவின் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்லடியிலிருந்து பண்பாட்டுப் பேரணி மட்டக்களப்பு மாநகர சபையின் பாட்டாளிபுரம் மைதானத்தில் நடைபெறவிருந்த நிலையில் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு இந்து இளைஞர் மன்றக் கட்டடத்தில் முத்தமிழ் விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தமிழ் மக்கள் பேரவையின் உப தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நான் எனது நீதித்துறைப்பயணத்தில் காலடி பதித்தது இந்த மட்டக்களப்பு மண்ணில்தான். 1978ஆம் ஆண்டு ஏற்பட்ட சூறாவளியின் காரணமாக வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்ட மனிங் ரைவ் வீதியிலிருந்த எமது உத்தியோகபூர்வ வாசஸ்தலம் மிகவும் பாதிப்படைந்திருந்தது.
ஆனால் மட்டக்களப்புச் சிறையில் இரண்டு வருடங்கள் மறியலில் இருந்த மாவை சேனாதிராஜா, காசி ஆனந்தன் போன்றவர்களை பிணையில் விடுவித்ததற்காக நான் உடனடியாக சாவகச்சேரிக்கு மாற்றப்பட்டேன்.
7 மாதங்களே என்னை இங்கிருக்க விட்டார்கள். அப்பொழுது எனது அன்புக்குப் பாத்திரமான சுவாமி ஜீவனானந்தாஜீ இராமகிருஸ்ண மிஷனின் தலைவராக இருந்தார்.
அத்துடன் தேவ நெசன் நேசையா குரு முதல்வராக இருந்தார் என்று நினைக்கிறேன். முப்பத்தியேழு வருடங்களின் பின்னர் பிறிதொரு கோலத்தில் உங்கள் முன் நிற்கிறேன்.
என் இனிய மட்டு நகர் மக்கள் மத்தியில் நின்று உரையாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். எமது தமிழ் பாரம்பரியங்கள், எமது தமிழ் வாழ்க்கைமுறைகள், சமூக ஒருமைப்பாடு வட கிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கும் சமஷ்டிக்கும் வழிவகுப்பன.
இதுவரை காலமும் நாங்கள் பல விதங்களில் முரண்பாடுகளையே முன்நிறுத்தி வந்திருக்கிறோம் என்றார்.