முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் குரலே விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரின் குரல்களில் ஒலிப்பதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியை பெற்றுக்கொடுப்பதே இவர்களின் தேவை எனவும் சுதந்திரக் கட்சியின் கோட்டே தொகுதி அமைப்பாளர் ஜனக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கோட்டே பிரதேசத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்ப போவதாக கூறும் ராஜபக்ஸ கோஷ்டியினர் ஒரு தொகுதிக்கு இரண்டு அமைப்பாளர்களை நியமித்து மோதல்களை உருவாக்கினர்.
ராஜபக்ஸ கோஷ்டியினர் கட்சிக்குள் மோதல்களை உருவாக்கியது மாத்திரமல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தினர்.
இதன் ஒரு பிரதிபலனாக கட்சிக்கு பெரும் சேவையாற்றிய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்டார். இதனால், கட்சியின் இளைஞர்களுக்கு தலைமை தாங்கிய துமிந்த சில்வா சிறைக்கு செல்ல நேர்ந்தது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை உடைப்பதாக ராஜபக்ஸ கோஷ்டியினர் குற்றம் சுமத்துகின்றனர். உண்மையில் ராஜபக்ச கோஷ்டியினரே கட்சியை உடைத்தனர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டு பதவிகளையும் சிறப்புரிமைகளை வழங்கியுள்ள தனது குடும்ப அதிகாரத்தை பாதுகாத்து கொண்டார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு கட்சியை பாதுகாப்பதை விட தனது குடும்பத்தை பாதுகாக்கும் தேவையே அதிகமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி புறம்பேசி, மோதல்களை உருவாக்கி கட்சியை சின்னாப்பின்னப்படுத்தினார்.
கூட்டு எதிர்க்கட்சியின் மக்களை ஏமாற்றுவதை ஒரு நாகரீகமாக மாற்றிக்கொண்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலவீனப்படுத்தி விட்டு அடுத்த தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்க முயற்சித்து வருகின்றனர்.
கூட்டு எதிர்க்கட்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் சிலரும் உள்ளனர். சரியான வழிக்கு திரும்புமாறு அவர்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.
நுகேகொடையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியை பசில் ராஜபக்சவே தோற்கடித்ததாக விமல் வீரவங்சவும் உதய கம்மன்பிலவும் குற்றம் சுமத்தினார்.
ஆனால், தற்போது பசில் ராஜபக்சவை தமது ஆலோசகராக மாற்றிக் கொண்டுள்ளனர். பசில் ராஜபக்ஸவின் குரலே இவர்களின் வாயில் இருந்து வெளியேறுகிறது.
இவர்கள் எப்படி கோஷமிட்டாலும் மகிந்த மீண்டும் நாட்டின் ஜனாதிபதியாக பதவிக்கு வர முடியாது.
2020 ஆம் ஆண்டு வரை பொதுத் தேர்தலும் நடக்காது. இதனால், இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது என்பது பகல் கனவு மாத்திரமே எனவும் ஜனக்க ரணவக்க கூறியுள்ளார்.