ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக்கொலை தொடர்பாக சந்தேகத்தில் பேரில் நான்கு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் ஓட்டமாவடிப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளிவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11.09.2016ம் திகதி ஏறாவூர்- முகாந்திரம் வீதியிலுள்ள வீட்டில் படுத்துறங்கிய 56 வயதான என்எம்.சித்தி உசைரா மற்றும் அவரது திருமணமான மகளான 32 வயதுடைய ஜெசீரா பாணு மாஹிர் ஆகியோர் பொல்லால் அடித்துக் கொடூரமாகக்கொலை செய்யப்பட்டிருந்தமை யாவரும் அறிந்த விடயம்.
இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையங்களின் இரண்டு குழுக்கள் புலன்விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
இதன் போது, கொலை செய்யப்பட்ட ஜெனீராவின் கணவரின் தம்பி ஏற்கனவே விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இதையடுத்து மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸார் கூறினர்.
பணம், நகைகள் கொள்ளையிட வந்த வேளை ஆட்கள் அடையாளங்காணப்பட்டதனால், குறித்த இருவரையும் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் அறிய வந்துள்ளது.