கோத்தபாய கடற்படை முகாம் அகற்றப்படவேண்டும் இல்லையேல் மக்கள் புரட்சி வெடிக்கும்

313

யுத்தத்தின் பின்னர் பொதுமக்களது நிலங்கள் இராணுவத்தால் அபகரிக்கப் பட்டுவருகின்றது. இதிலும் குறிப்பாக வடகிழக்குப் பிரதேசங்களில் இராணுவத்தினது அத்துமீறல்கள் அதிகமாகக்காணப்படுகின்றது. நாட்டின் பாதுகாப்பு அல்லது உயர் வலயம் எனக்கூறி தமிழ் மக்களது காணிகளை முக்கியமாக மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும் இந்த இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலும் குறிப்பாக வன்னிப் பகுதியிலேயே பாரியளவில் இராணுவத்துக்கென நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணத்தில் கணிசமான இராணுவ முகாம்கள் மக்களது குடியிருப்புப் பிரதேசங்களிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் கரையோரப் பிரதேசங்கள் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ளது. நாகர்கோயில், சுண்டிக்குளம், வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொதுமக்களை குடியமர்த்த இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இப்பகுதிகளைச்சேர்ந்த 15000குடும்பங்கள் மணற்காடு, மிருசுவில், கொடிகாமம், பருத்தித்துறை, கற்கோவலம் போன்ற பிரதேசங்களில் வசித்துவருகின்றனர். அதே போல வெருகலிலிருந்து பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களில் கடற்படையினரின் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கல்லடி, வாகரையிலும் புதிய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் இராணுவத்தின் மிக முக்கியமான பாதுகாப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் கோத்தபாய கடற்படை முகாம் முக்கிய பங்கு வகிக்கின்றது. முல்லைத்தீவு கடற்கரைப் பிரதேசங்களில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அல்லது கடற்தொழில் செய்வதற்கு படை யினர் இன்னமும் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கவில்லை. முல்லைத்தீவு கடற்படை முகாமுக்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் காணப்படுகின்றன. இப்பிரதேசத்திற்குச்சென்று மக்கள் கால் நடைகளை வெளியில் கொண்டுவருவது தொடர்பில் முல்லைத்தீவு அரச அதிபருக்குத் தெரிவித்தபோதிலும், பல சந்திப்புக்கள் நடைபெற்றபோதிலும் இன்னமும் இதற்கான உரிய தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. யுத்தம் நிறைவடைந்து 07வருடங்களைக் கடக்கவுள்ள நிலையிலும் தமிழர் பிரதேசங்களை இராணுவத்தினர் சுவீகரித்து ;நிலைகொண்டிருப்பதானது தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகலில் உள்ள இலங்கை கடற்படை முகாமான கோத்தபாய முகாமை மேலும் பலப்படுத்தும் செயற்பாட்டில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நல்லாட்சியில் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் கடற்படை முகாம் மேலும் பலப்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான 379 ஏக்கர் நிலமும், மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணி யுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது.

vadduvakal-6-670x447

இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக இந்தக் காணி களை கடற்படையினர் தமது வசம் வைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றனர். இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும், தெருக்களிலும் அகதிகளாக அலைகின்றனர். இந்த நிலை யில் குறித்த பகுதியில் கடற்படை விவ சாய நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டு பெறுமதிமிக்க பனைமரங்களை அழித்திருந்தனர். சாதாரணமாக முள்வேலி அமைக்கப்பட்டிருந்த பகுதியில் தற்போது பலமிக்க பாதுகாப்பு வேலியை அமைக்கும் முயற்சியில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இக்காணிகளை விடுவிக்கக்கோரி கடந்த 01மாதங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தில் மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தினால் எவ்வித பயனும் அவர்களுக்குக்கிட்டவில்லை. முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிரதேசத்திலும் நாயாறு, கொக்குளாய், கொக்குத்தொடுவாய், மண்கிண்டி மலை குறிப்பாக ஒட்டுசுட்டான், முழங்காவில், கொக்காவில், விஸ்வமடு போன்ற பிரதேசங்களிலும் மக்கள் நடமாடுகின்ற பகுதிகளில் ஏற்கனவே விடுதலைப்புலிகளின் முகாம்கள் அமைக்கப்பட்டதாகக்கூறி இராணுவத்தினர் இக்காணிகளைச் சுவீகரித்துவைத்துள்ளனர். யுத்தத்தைக்காட்டி தமிழ் மக்களின் பிரதேசத்தை சூறையாடிய இராணுவத்தினர் யுத்தம் முடிந்த நிலையில் தமிழ் மக்களது சொத்துக்களை அபகரிப்பதில் குறியாக உள்ளனர். அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வடகிழக்கில் இராணுவத்தால் சுவீகரிக்கப்பட்ட காணி களைப் பார்வையிடச் சென்றிருந்தார். அப்போது அத்துமீறி பிரவேசித்தார் எனக்கூறப்பட்டது. சம்பந்தன் சுடப்பட்டிருக்கவேண்டும் என உதய கம்மன்பில தெரிவித்தார். இதைவிட வும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் வடமாகாணசபைக்கு இருந்தும் அரசு வழங்குவதாகவில்லை. இச்சமயத்தில் யுத்தத்தின் பின்னர் நடைபெற்ற ஒருசில சம்பவங்களை நினைவுபடுத்துவது சிறந்ததொன்றாகும்.

சிங்களமயமாக்கல் புதிய செயற்பாடல்லாதபோதும் 30 வருடகால யுத்தத்தின் பின் இது மிகத் தீவிரமாக உள்ளது. பழையனவற்றை ஊறுபடுத்தல் திட்டமிட்ட சிங்களமயமாக்கல் இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகத்தில் ஏற்படுத்தப்படுகின்றமையை சமூகச்சிறப்புகள் அமைப்பு வெளியிட்டது.திட்டமிட்ட, அதிகரித்த பரவலான சிங்களமயமாக்கல் வரலாற்று முக்கியமான தமிழிடங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு, மலையகத்தில யுத்தத்திற்கு பின்பான சூழலில் ஏற்படுத்தப்படுகின்றது. பல தசாப்தங்களாக இலங்கையின் அரசுக்கள் சிங்களமயமாக்கலை ஏற்படுத்தி வருகின்றது. இது யுத்தத்தின் வடுக்களை ஆற்ற உதவாது. அரசாங்கம் அபிவிருத்தி, பாலம் கட்டல், தெரு அமைத்தல் என்பனவற்றை செய்கின்றபோதிலும் தமிழ்மக்களது உரிமை களை மதிக்கவில்லை. சிங்களமயமாக்கல், அரசு திட்டமிட்ட குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்பு, இராணுவ ஆக்கிரமிப்பு, எல்லைகளை மாற்றல், கிராமங்களின் தமிழ் பெயர்களை சிங்களப் பெயர்களாக மாற்றல் என்பனவாகும்.

சிங்களமயமாதல் தமிழரின் கலாச்சார நிகழ்ச்சிகளிலும், சமய நிகழ்ச்சிகளிலும், பொருளாதார செயற்பாடுகளிலும், பொதுசேவை ஆட்சேர்ப்பிலும் உள்ளடக்கப்பட்டு உள்ளது. இலங்கையின் கல்வித்திட்டத்திலும் சிங்களமயமாதல் காணப்படுகின்றது. ஆனால் தமிழ்ச்சமூகம் பாரிய யுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. அழிக்கப்பட்ட ஆலயங்கள், இறந்தவர்களுக்கான உணர்வுபூர்வமான அஞ்சலிகள் என்பவற்றிற்கு இன்னமும் இடம் இல்லை.

vadduvakal-2-670x447

சிங்களமயமாதலில் மிகவும் முக்கியமான அம்சம் இராணுவ மயமாக்கல். தமிழ் பிரதேசத்தின் சாதாரண பொதுநிர்வாகம் இராணுவக் கட்டமைப்பினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றது. வடக்கு கிழக்கு மட்டுமல்லாது மலையகத்திலும் தமிழ் மக்கள் மீது இராணுவக்கட்டுப்பாடு உள்ளது. இவை சிங்களவர்கள் தமிழர்கள் மீது ஆட்சிபுரிதலை இலகுபடுத்தி உள்ளதுடன், தமிழ் மக்களிடையே ஒருவகை அச்ச உணர்வையும் நிலைநிறுத்தி வைத்துள்ளது. யுத்தம் முடிந்து 6 வருடங்களான போதிலும் பயம், சந்தேகம், நம்பகத்தன்மையின்மை என்பன தமிழ் சிங்கள இனங்களுக்கு இடையே பாரிய அளவில் உருவெடுத்து உள்ளது. உண்மையினை ஏற்றுக் கொள்ளாது 2015 தை மாதத்திற்கு பின் தமிழ் தேசியத்தை முடக்கும் நடவடிக்கைகள் நடைபெறுகிறது.

நல்லிணக்கம் ஏற்படாது, இனமுறு கல் நிலையே இன்றும் காணப்படுகின்றது. இதனால் நாடு மேலும் முனைவாக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. மஹிந்த அரசு யுத்தத்தில் வென்றது. மிகவும் பலவீன எதிர்க்கட்சியை உடையது. பெரும்பான்மை பலத்தினை பாராளுமன்றில் அரசமைப்புக்கு கட்டுப்பட்டு இருக்கவில்லை. இது பகுதிச் சர்வாதிகார ஆட்சியினை நடத்தியது. 2015 தேர்தல்கள் குடும்ப ஆட்சியினை முடிவுக்கு கொண்டுவந்து சிங்கள இன ஆட்சியினை ஏற்படுத்தி உள்ளது.
சிங்களத்தேசியம், தமிழ்ச் சமூகத்தின் உரிமைகள் பற்றி அக்கறைப்படுவதாக இல்லை. தமிழர்கள் தமது உரிமைக்காக குரல் கொடுக்க முடியவில்லை. தம்மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிர்ப்பினை காட்ட மட்டுமே முடிகின்றது. இங்கு கடும் சிங்கள பௌத்த வாதத்தினை சிங்களமயமாதலின் ஆழத்தினையோ ஆராயவில்லை. ஆனால் மகிந்த அரசின் யுத்தத்திற்கு பின்பான சிங்களமயமாதலின் சாட்சியத்தினை எடுத்துக்காட்ட உள்ளது.

1. முன்னுரையும் பின்னணியும்
வரலாற்றில் இலங்கையில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பின்பு 1948ல் இவ்வுறவுகள் கடினமடைந்தன.சுதந்திரத்திற்குப் பின் பிரித்தானியரால் தமிழர்களுக்கு கூடிய சலுகைகள் அளிக்கப்பட்டன என்ற நிலையை சிங்களவர் கூறினர். அதற்குப் பின் தமிழருக்கு எதிரான பல சட்டமூலங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டன.
1948ஆம் ஆண்டு குடியுரிமைச்சட்டம் 1 மில்லியன் தமிழர்களை தோட்டத் தொழிலாளர்களாக இந்தியாவில் இருந்து வந்தவர்களை நாடற்றவர்களாக்கியது. 1949ஆம் ஆண்டு குடியுரிமைச்சட்டம் அவர்களுக்கான வாக்குரிமையினை இல்லாது செய்தது. இந்தச் சூழ்நிலையில் தமிழ் சிங்கள இனங்களுக்கிடையிலான விரிசல் அதிகரித்தது. தமிழர்களுக்கு எதிராக பல கலகங்கள் ஏற்பட்டன. சுதந்திரத்திற்கு பின் முதலாவது இலங்கை முழுவதுமான தமிழர் அழிப்பு 1956ம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் கல்லோயாத்திட்டத்தில் ஏற்பட்டது.

இனப்படுகொலைகள் 1958, 1977, 1981, 1983 இலும் நடைபெற்றன. பின் 1990 தொடக்கம் 2009 வரை ஆங்காங்கே நிகழ்ந்து உள்ளன. 2007இல் அரசு, வீடுகளற்ற தமிழர்களை கொழும்பில் இருந்து அகற்றி, பேரூந்துகளில் பொலிஸ் காவலுடன் வவுனியா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியது. ஆரம்பத்தில் 500 மக்களை வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்புக்கு அனுப்பி வைத்தது.

சிங்களம் மட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை இலங்கை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஒரே நாடு, ஒரே மக்கள் என்பது இதனையே குறிக்கும். 1956ம் ஆண்டு தனிச்சிங்களச்சட்டம் அரசினால் முதலில் எடுக்கப்பட்ட சட்டமூலம். அடுத்து 1979ம் ஆண்டு பயங்கரவாதத் தடைச்சட்டம், இலங்கையில் அவசரகால நிலையினை அமுல்படுத்தியது. இது கடந்த 40 ஆண்டு காலமாக நாட்டில் அமுலில் இருந்தது. இச்சட்டம் சிங்களமயமாக்கலுக்கு உறுதுணையாக அமைந்தது. அரசு ஆதரவு தமிழ் எதிர்ப்புக் கொள்கைகளுடன் பொலிஸ், இராணுவம் முற்றுமுழுதாக சிங்கள நிறுவனங்களாகத் திகழ்ந்தன. சட்டத்தை அமுல்படுத்தும் பகுதி யும் தமிழர்களுக்கு எதிரான அடிப்படை உரி மைகளை அடக்குவதில் உதவின.

சிங்கள பௌத்த பேரினவாதம் இலங்கையினைச் சிங்கள பௌத்த நாடாக மாற்றுவதில் தீவிரம் கொண்டு உள்ளது. உலகின் பார்வைக்கு இலங்கை பௌத்த நாடாகத்தான் தெரிகின்றது. இங்கு உள்ள அரசமைப்புச்சட்டம் பின்னர் பௌத்தமதத்தினையே பாதுகாக்கின்றது.

இதனை ஏற்க மறுப்பவர்கள் நாட்டின் எதிரிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இத்தகைய பின்னணியில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு என்பது எச்சந்தர்ப்பத்திலும் சாத்தியப்படாத ஒன்றே. அதேபோல் 2009இல் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கான விசாரணை, ஐ.நா மனித உரிமை அவையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி, அத்தீர்மானம் இலங்கை அமைச்சரவைத் தீர்மானம்போல் அமைந்து உள்ளது.

தொடரும்…
                                         சுழியோடி

SHARE