2016 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட கபடிப்போட்டியில் தேசிய மட்டத்தில் 01 ஆவது இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற மன்னார் கட்டையடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளி 16-09-2016 மாலை 4 மணிக்கு இடம்பெற்றது.
குறித்த தேசிய சாதனையாளர்களை மடு சந்தியில் இருந்து ஊர்வலமாக மளுவராயர் கட்டையடம்பன் புனித செபமாலை மாதா ஆலயம் வரை அழைத்து வரப்பட்டு, தொடர்ந்து குறித்த தேவாலயத்தில் நன்றி திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து ஆலய மைதானத்தில் கலைநிகழ்வுகளும் சாதனையாளர்களை பாராட்டும் நிகழ்வும் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது.
குறித்த நிகழ்விற்கு மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க பரிபாலகர் கிங்சிலி சுவாம்பிள்ளை அவர்களும், பங்குத் தந்தையர்கள், மகளிர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், காதர் மஸ்தான் ஆகியோரும் வடக்கு மாகாண போக்குவரத்து கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான வைத்தியர் ஞா.குணசீலன், அ.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோரும் ஏனைய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு தேசிய சாதனையாளர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



