சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை நியமியுங்கள்! ஐ.நா. பேரவையில் அனந்தி வலியுறுத்து

260

download-1

இலங்கையின் போலி நல்லிணக்கத்தின் உண்மையான நிலையை மதிப்பிட உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் என்பனவற்றின் அரசியல் அழுத்தங்களை கடந்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நியமிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

யுத்தத்தின் இறுதி வருடத்தில் 150,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் 125 பேர் மட்டுமே சிறைகளில் உள்ளனர்.

அப்படியாயின் எஞ்சியவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது? என்றும் அனந்தி சசிதரன் கேள்வியெழுப்பினார்.

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 33வது கூட்டத் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற அமர்வில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான நேர ஒதுக்கலின் போதே அனந்தி சசிதரன் உரையாற்றினார்.

வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் காணாமல் போனவர்களின் உறவினர்களான பெண்களின் சார்பாகவும் இலங்கையில் இனப்படுகொலை நடந்தது என்பதற்கான சாட்சியாகவும் நான் இங்கு வந்திருக்கின்றேன்.

இனப்படுகொலை யுத்தத்தின்போது இறுதி ஒரு வருடத்தில் வன்னி பிராந்தியத்தில் மட்டும் 146679 பேர் கணக்கில்கொள்ளப்படவில்லை.

ஆனால் இன்றைய நிலைவரப்படி இலங்கை சிறைகளில் 125 தமிழ் அரசியல் கைதிகளே இருப்பதாக அரசாங்க தரப்பு தெரிவித்துள்ளது.

எனினும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 30 வருடகால யுத்தம் காரணமாக 150,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

அதாவது 150,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் 125 பேர் மட்டுமே சிறைகளில் உள்ளனர். அப்படியாயின் எஞ்சியவர்கள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?

அவ்வாறு இனப்படுகொலையை நடத்தியவர்களுக்கு யுத்தம் குற்றம் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை புரிந்தவர்களும் தற்போது அரசாங்கத்திலும் இராணுவத்தின் உயர் பதவிகளிலும் உள்ளனர்.

மேலும் இலங்கை அரசாங்கமானது தற்போது சிறைகளில் உள்ள 125 பேரைக் கூட விடுவிப்பதற்கு தயாராக இல்லை. இது எவ்வாறு நல்லிணக்கம் என்று அழைக்கப்பட முடியும்?

எனவே இலங்கையின் போலி நல்லிணக்கத்தின் உண்மையான நிலையை மதிப்பிட உறுப்புநாடுகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் என்பனவற்றின் அரசியல் அழுத்தங்களை கடந்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவை நியமிக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகின்றேன்.

SHARE