டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அத்தனைப் பேர் கூடி வேடிக்கை பார்க்க ஒரு இளம் பெண்ணை அவரது முன்னாள் காதலன் 30 முறைக்கும் மேலாக கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொலை செய்த செயல் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.
மக்கள் எல்லாம் இதைப் பார்த்து சிதறி ஓடுகிறார்கள். ஆனால் அந்த நபரோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பெண்ணை வெறி கொண்டு குத்திக் கொன்றுள்ளான். 30 முறைக்கும் மேலாக அந்தப் பெண்ணை அந்த நபர் வெறித்தனமாக குத்தியுள்ளான். அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் கருணா என்று தெரிய வந்துள்ளது. 21 வயதேயாகும் அவர் வடக்கு டெல்லியில் உள்ள புராரி பகுதியைச் சேர்ந்தவர். நாவல் ரீச்சஸ் ஸ்கூல் என்ற பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
அவரை குத்திக் கொன்ற நபர் அவரது முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. இந்த பங்கர சம்பவம் தொடர்பாக டெல்லி வடக்கு காவல்துறை துணை ஆணையர் மதுர் சர்மா கூறுகையில், இன்று காலை 9 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. கொலை செய்த நபரின் பெயர் சுரேந்தர் சிங். 34 வயதாகும் இவர் அப்பெண்ணுக்குத் தெரிந்தவர்தான். முன்னாள் காதலர் என்று கூறப்படுகிறது. அப்பெண்ணை காப்பாற்ற யாரும் முன்வராதது அதிர்ச்சி தருகிறது என்றார்.
மதுர் சர்மா மேலும் கூறுகையில், கொலைச் சம்பவத்திற்குப் பின்னர்தான் பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்துள்ளனர். அப்போது அவன் தப்ப முயன்றான். இருப்பினும் பொதுமக்கள் அவனை விடாமல் பிடித்து அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். கடந்த ஒரு வருடமாகவே அப்பெண்ணுக்கு இவன் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இதுகுறித்து போலீஸிலும் புகார் தரப்பட்டது. இரு குடும்பத்தினரும் சந்தித்துப் பேசி சமாதானமாகினர்.
ஆனால் இன்று காலை அந்த நபர் அப்பெண்ணை பின் தொடர்ந்து வந்து மடக்கி்ப் பிடித்து கொலை செய்துள்ளான். அப்பெண்ணின் உடலில் மொத்தம் 30 முறைக்கும் கத்திக் குத்து விழுந்துள்ளது என்றார். கொலையாளி சுரேந்தர் சிங் ஏற்கனவே ஒரு பெண்ணைத் திருமணம் செய்து விவாகரத்து பெற்றவராம்.
முன்னதாக குற்றவாளியை ஒரு இளைஞர் தடுக்க முயன்றார். ஆனால் அந்த நபரை நோக்கி கத்தியைக் காட்டி கொலையாளி மிரட்டியதால் அந்த நபர் விலகுகிறார். ஆனாலும் எப்படியாவது தடுக்க முயலும் அவருக்கு துணைக்கு யாரும் வரவில்லை. இந்த இடைவெளிக்குள் கொலைகாரன் தனது நோக்கத்தை நிறைவேற்றி விட்டான். சுவாதியை விட மிக மோசமான முறையில் இந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.