நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நேற்று தெஹிவளை மிஹிந்து மாவத்தையில் உள்ள யோஷித்த ராஜபக்சவுக்கு சொந்தமான காணி மற்றும் வீட்டை அளவிட சென்றிருந்தனர்.
எனினும் யோஷித்த ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஆச்சி ஆகியோர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரி சீ.ஏ.பீ. வீரரத்ன, அரச நில அளவையாளர் குழு நேற்று முற்பகல் 9 மணியளவில் காணி மற்றும் வீடு இருக்கும் இடத்திற்கு சென்று முற்பகல் 11.30 மணிவரை அந்த இடத்தில் காத்திருந்தனர். எனினும் அங்கு எவரும் வரவில்லை.
இதனையடுத்து பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரி, யோஷித்த ராஜபக்சவின் சட்டத்தரணியை தொடர்பு கொண்டார். அவருக்கு சரியான பதிலை வழங்கவில்லை.
இந்த நிலையில், நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் பிணை நிபந்தனைகளை மீறியதாக இன்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.
விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காத காரணத்தினால் யோஷித்த ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியின் பிணை ரத்துச் செய்யப்பட்டு, அவர்களை கைது செய்ய நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் பிடிவிராந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக தெரியவருகிறது.
மிஹிந்து மாவத்தையில் உள்ள 24 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த காணி மற்றும் வீடு என்பன டெய்சி பெரஸ்டி என்ற யோஷித்தவின் பாட்டியார் யோஷித்தவிற்கு பரிசாக வழங்கியதாக புதிவு செய்யப்பட்டுள்ளது.