அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் மாற்றம் எதனையும் காண முடியவில்லை.-முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன்

237

download

வடமாகாணசபையின் ஒப்புதல் பெறாமல், குறைந்தபட்சம் எமக்கு ஒரு தகவலும் கூட தெரியப்படுத்தப்படாமல் மத்திய அரசாங்கம் எமது மாகாணத்தில் பல செயற்றிட்டங்களை செய்கிறது. இதனை நாங்கள் பல தடவைகள், பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளபோதும், மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடுகளில் மாற்றம் எதனையும் காண முடியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

யாழ்.கேரதீவு பகுதியில் தனியார் ஒருவரினால் அமைக்கப்படும் உப்பளம் மற்றும் பூநகரி- கௌதாரிமுனை பகுதியில் அமைக்கப்படும் ஹோட்டல் ஆகியவற்றுக்கு ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளதாக வெளியாகும் செய்திகள் தொடர்பாக வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் அவர் குறிப்பிடுகையில்,

கேரதீவு பகுதியில் அமைக்கப்படும் உப்பளம் தொடர்பாக எங்களுக்கு எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை. எங்களிடம் அனுமதிகள் பெறப்படவில்லை. அவர்கள் மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு செய்கின்றார்கள்.

ஆனால் அந்த விடயத்தில் கடற்றொழிலாளர்களும், விவசாயிகளும் கடுமையான எதிர்ப்பினை காட்டி வருகின்றார்கள். மக்களுடைய எதிர்ப்பை நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும், அவர்களின் மனோ நிலையை கருத்தில் கொள்ளவேண்டும்.

இதேபோல் உப்பளம் அமைப்பதினால் உண்டாகும் சுற்று சூழல் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாகவும் நாங்கள் சிந்திக்கவேண்டும். எனவே இந்த விடயங்களை அடிப்படையாக கொண்டு நாங்கள் உரிய தரப்புக்களுடன் பேசிக்கொண்டிருக்கின்றோம். உன்மையில் உப்பளத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதி எங்களுக்கு தெரியாமலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கௌதாரிமுனை ஹோட்டலிற்கு வடமாகாணசபை அல்லது முதலமைச்சர் அனுமதி கொடுக்காத நிலையில் ஆளுநர் அனுமதி கொடுத்துள்ளார் என தனியாக பார்க்கவேண்டியதில்லை.

ஒட்டுமொத்தமாக அரசாங்கம் எமக்கு தெரியாமல் எமது ஒப்புதலை பெறாமல் மத்திய அரசாங்கம் தான்தோன்றித்தனமாக எங்களுடைய மாகாணத்தில் பல செயற்றிட்டங்களை செய்து வருகின்றது.

13ஆம் திருத்தச்சட்டத்தின் கீழ் அரசாங்கம் தாங்கள் நினைத்ததையெல்லாம் செய்யலாம் என நினைத்தாலும் கூட அதனை மாகாண அரசாங்கத்துடன் பேசியே செய்ய வேண்டும். அவ்வாறில்லாமல் மத்திய அரசாங்கம் தாங்கள் நினைப்பதையெல்லாம் தான்தோன்றித்தனமாக செய்து கொண்டிருப்பதானது பிழையானது என முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை கேரதீவு உப்பளம் அமைப்பதற்கும் பூநகரி- கௌதாரிமுனை பகுதியில் ஹோட்டல் ஒன்றை அமைப்பதற்கும் ஆளுநரே அனுமதிகளை வழங்குமாறு திணைக்களங்கள் சிலவற்றுக்கு பணித்திருப்பதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE