மத்தல சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 19 வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 7 நிறுவனங்களும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் பெற்றுக் கொள்வதற்கு 2 நிறுவனங்களும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 10 நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதில் மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு யோசனை முன்வைத்துள்ள 7 நிறுவனங்களில் IZP என்ற சீன நிறுவனம் விசேட ஆர்வம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்திற்கு சிவில் விமான சேவைகள் அமைச்சினால் அழைக்கப்பட்ட யோசனைக்கமைய இந்த நிறுவனங்கள் தங்கள் யோசனைகளை முன்வைத்துள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு அந்த துறைமுகத்தை நிர்மாணித்த சீனத் துறைமுக நிறுவனம் மற்றும் கொழும்பு தெற்கு துறைமுகத்தை நிர்மாணித்த சீன மர்சன்ட் நிறுவனம் யோசனை முன்வைத்துள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதில் சீன மர்சன்ட் நிறுவனம் சீனாவின் பிரபல கப்பல் நிறுவனம் என தெரியவந்துள்ளது. எனினும் அந்த நிறுவனங்கள் மூன்றின் கட்டுபாட்டினை எந்த நிறுவனத்திற்கு வழங்குவதென்பது தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் மெற்கொள்ளப்படவில்லை. இந்த நிறுவனங்கள் மூன்றில் உள்ள கடன் அளவை ஏற்றுக் கொண்டு அதனை நிர்வகிப்பதற்கு முன் வரும் நிறுவனத்திற்கு அதன் நிர்வாக நடவடிக்கை வழங்கப்படவுள்ளதாக அந்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.