ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

236

0318

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அமைச்சர்கள் குழு இந்தப் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் உட்பட பல நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்த கலந்துரையாடல்களில் எல்லாம் இலங்கைக்கு பாராட்டு மழை பொழியப்பட்டுள்ளது.இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பெருமிதமாக கூறியிருக்கிறார்.

இலங்கைக்கு இன்று உலகில் எங்குமே எதிரி நாடுகள் இல்லை. அனைத்து நாடுகளும் எம்முடன் நட்புறவு பாராட்டி வருகின்றன.

இலங்கைக்கும் தமக்குமிடையில் எவ்விதமான இடைவெளியும் இல்லை என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அல் ஹுசைனும் கூறியுள்ளார். என்னை சந்தித்த போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மாற்றம் தொடர்பில் என்னிடம் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை தொடர்பில் எல்லோருமே பாராட்டுக்களை தெரிவித்தனர். அவர்களுடைய இந்த சாதகமான பிரதிபலிப்புக்கள் தொடர்பில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஜனாதிபதி அங்குள்ள இலங்கை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த போது இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா உட்பட பலரையும் சந்தித்து நான் கலந்துரையாடினேன். இதன்போது அவர்கள் எமக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இலங்கையில் தெளிவான மாற்றமொன்று தென்படுகின்றது என்றும் ஐ.நா.வின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையில் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் தெரிவித்திருந்தனர்.

015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஆட்சிக்கு வரும் போது சர்வதேச உறவு சீர்குலைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த 20 மாதங்களில் நாங்கள் அந்த நிலையை மாற்றியமைத்துள்ளோம்.

அனைத்து நாடுகளும் எமக்கு ஆதரவு வழங்கவும், ஒத்துழைப்பு வழங்கவும் தயாராக இருக்கின்றன என்றும் ஜனாதிபதி எடுத்துக்கூறியிருக்கின்றார்.

உண்மையிலேயே ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள சர்வதேச நாடுகளின் தலைவர்கள் இலங்கையின் செயற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் மாற்றங்கள் முழு உலகிற்கும் முன்னுதாரணமானவையாகும். அந்த வகையில் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக சகல உதவிகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்திருக்கின்றார்.

இதேபோன்று இலங்கையில் யுத்தத்திற்குப் பின்னரான காயங்களை ஆற்றுப்படுத்தும் செயற்பாடுகள் மிகவும் ஆழமான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளில் சிறுபான்மை, மற்றும் பெரும்பான்மையினர் இணைந்து ஒற்றுமையையும் புதிய தேசத்தையும் கட்டியெழுப்புவதில் உண்மையான நல்லிணக்கம் முக்கியத்துவம் பெறுகின்றது என்று ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கூறியிருக்கின்றார்.

இதேபோல், ஏனைய நாடுகளின் தலைவர்களும் இலங்கையின் தற்போதைய செயற்பாடு குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கின்றனர்.

புதிய நல்லாட்சி அரசாங்கமானது நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதுடன் பொறுப்புக்கூறும் விடயத்திலும் அக்கறை காண்பித்து வருகிறது.

கடந்த அரசாங்கத்துடன் ஒப்பிடுகையில் இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தி அரசியல் தீர்வொன்றை காண்பதற்கான முன்முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.

பாராளுமன்றமானது அரசியல் யாப்பு சபையாக மாற்றப்பட்டு அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய வகையில் உள்ளக விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ள அரசாங்கம் உள்ளகப் பொறிமுறைக்கான செயற்பாட்டிலும் ஈடுபட்டிருக்கிறது.

காணாமல் போனோர் விவகாரத்திற்கு தீர்வு காணும் நோக்கில் காணாமல் போனோருக்கான செயலகத்தை அமைப்பதற்கான சட்டமூலமும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும் அன்றாடப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முன்முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் செயற்பாடுகளுக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பாராட்டுமழை பொழிந்திருக்கின்றனர்.

ஆனால், இந்தப் பாராட்டுதல்களும் மகிழ்ச்சியும் எதிர்காலத்திலும் தொடரவேண்டுமானால் நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும்.

இவ்வாறு உண்மையான நல்லிணக்கம் ஏற்படவேண்டுமானால் சிறுபான்மையின மக்களது அன்றாடப் பிரச்சினைகளுக்கும், அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் உறுதியான தீர்வு காணப்படவேண்டியது அவசியமாகும்.

பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கமானது அக்கறைகாட்டி வருகின்ற போதிலும் அதில் முழுமையான ஈடுபாடு காட்டுவதாக தெரியவில்லை.

மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளை உள்ளடக்கிய உள்ளகப் பொறிமுறை விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்தத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட அரசாங்கமானது தற்போது சர்வதேச நீதிபதிகளற்ற உள்ளக விசாரணையே சாத்தியம் என்று கூறுகின்றது.

சர்வதேச நீதிபதிகளற்ற விசாரணையொன்று நடத்தப்பட்டாலும் கூட அது எந்தவகையில் பாதிக்கப்பட்ட மக்களை திருப்திப்படுத்தும் என்பது கேள்விக்குறியாகவே அமைந்திருக்கின்றது.

இவ்வாறு நடத்தப்படும் விசாரணையானது உரிய பயன் அளிக்காவிடின் தற்போதைய பாராட்டுக்கள் தொடரும் என்று கூற முடியாது.

இதேபோல், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தொடர்ந்தும் பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

காணாமல் போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடயம், மக்களின் மீள் குடியேற்றம், தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் மீள ஒப்படைக்கப்படல் உட்பட பல்வேறு விடயங்களிலும் தீர்வுக்காக தமிழ் மக்கள் ஏங்கி வருகின்றனர்.

இந்த விடயங்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கமானது அக்கறை காட்டி வருகின்ற போதிலும் அந்த செயற்பாடுகளின் வேகமானது போதுமானதாக இல்லை.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் செல்வதனால் தமிழ் மக்கள் தற்போது வெறுப்படைந்திருக்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 20 மாதங்கள் ஆகிவிட்ட போதிலும், தமது பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாகத்தான் தமிழ் அரசியல் கைதிகள் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கின்றனர்.

இதேபோல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாததைக் கண்டித்து தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நாளை யாழ்ப்பாணத்தில் எழுக தமிழ் எனும் போராட்டமும் நடத்தப்படவுள்ளது.

எனவே, தற்போதையநிலையை கருத்தில் கொண்டு அரசாங்க மானது தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைக் கண்டு நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்த முயலவேண்டும்.

இதேபோல் பொறுப்புக்கூறும் விடயத்திலும் அரசாங்கமானது தீவிர அக்கறை காட்டவேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தால் தான் நாட்டில் சமூகங்களிடையே நிரந்தர ஒற்றுமை ஏற்படும்.

அவ்வாறு ஏற்பட்டால் தான் சர்வதேச சமூகத்தின் பாராட்டானது இலங்கைக்கு தொடர்ந்து கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

SHARE