மூர்ச்சித்து நிற்கும் முஸ்லிம்களும், மௌனியாகிப்போன தலைமை பீடங்களும்!
பிரச்சினையின் ஆரம்பம்.
கடந்த 12.06.2014 அன்று அளுத்கம பகுதியில் ஒரு பௌத்த பிக்குவை ஏற்றி வந்த வாகன சாரதிக்கும், முஸ்லிம் அன்பர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் இறுதியில் பிக்குவை குறிப்பிட்ட முஸ்லிம் அன்பர் தாக்கிவிட்டதாக திசைதிருப்பப் பட்டு இனவாத முறுகல் நிலையினை தோற்றுவிப்பதற்கான சந்தர்ப்பமாக மாற்றப்படலானது. இதன் விளைவாக சுமார் 1000 நபரளவில் ஒன்று திரண்டு அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 2 முஸ்லிம்கள் போலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
நேற்று (15.06.2014) நடந்தது என்ன?
12.06.2014 அன்று இடம்பெற்ற முறுகல் நிலையை பயன்படுத்தி, இனவாதத் தீயை மூட்டி முஸ்லிம்களை கருவறுக்கும் நோக்கில் பொது பல சேனாவினால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று மாலை அளுத்கமையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக ஏலவே ஊடகங்களுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினரால் தகவல் வழங்கப்பட்டிருப்பினும், சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்கெடுக்கும் இது போன்ற ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை அரசு தரப்போ, அல்லது பாதுகாப்பு அமைச்சின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையிலும் இறங்காதது மட்டுமன்றி, 22 பொலிஸ் பிரிவுகளிலிருந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொலிஸ் காவலர்களை வைத்து இனவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கியமை கண்டிக்கத்தக்க விடயமாகும். சமாதான சூழ்நிலை சீர்கெடுவதற்கு முன்பே சுதாகரித்து ஆர்ப்பாட்டத்தை தடைசெய்ய கடமைப்பட்டவர்கள் அதனை கண்டுகொள்ளாதுவிட்டமை ஏற்பட்ட விபரீதங்களுக்குப் பின்னணியில் மறைகரம் தொழிற்பட்டுள்ளது என்பதனையே எடுத்துக் காட்டுகின்றது.
அளுத்கமை அராஜகத்துக்கு அடிப்படையாய் அமைந்த ஞானசார தேரரின் ஆவேசப் பேச்சு.
இன்று ஏற்பட்ட பாரிய இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உந்து சக்தியாக அமைந்தது பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரரின் இனவாதத்தை கக்கச் செய்த ஆவேசமான உரையே என்றால் மிகையாக மாட்டாது.
இவர் தனது உரையிலே பயன்படுத்திய “எந்தவொரு மரக்கல முஸ்லிமாவது ஒரு சிங்களவன் மீதாவது கையை வைத்தால் அதுவே அவர்களது இறுதி முடிவுக்கு அடையாளம்“, “இந்த நாட்டிலே மரக்கல முஸ்லிம்களுக்கு தலைமைத்துவம் உள்ளது. சிங்கள மக்களுக்கு ஒரு தலைமைத்துவம் இல்லை“,அளுத்கமையில் இடம்பெற்றது ஒரு நிகழ்வல்ல. பல நிகழ்வுகளின் தொடராகும்“, ”நாங்கள் இனவாதிகள் தான். மதவாதிகள் தான்” என்பன போன்ற வாசகங்கள் பெரும்பான்மை மக்களின் அகங்களில் முஸ்லிம்கள் குறித்த வெறுப்புணர்வை வளர்ப்பதற்கும், முஸ்லிம்களை பலிவாங்க வேண்டும் என்ற உணர்வை நோக்கி சாய்வதற்கும் ஏதுவான காரணியாக அமைந்துவிட்டது எனலாம்.
இனவாத தாக்குதலை நோக்கிய ஊர்வலத்தின் நகர்வு!
அளுத்கமை தர்கா நகருக்கு மத்தியில் அமைந்துள்ள சீன வத்த பகுதியால் ஆர்ப்பாட்டக் காரர்கள் செல்லும் போது அங்கு பல வீடுகளுக்கு கல் வீச்சுகள் எறியப்பட்டன. அத்தோடு பள்ளிவாசலில் குழுமியிருந்த முஸ்லிம்களை கடந்து செல்கையில் ஆவேசமான வசனங்கள் முஸ்லிம்களை நோக்கி உச்சரிக்கப்பட்டவுடன் இரு தரப்பினருக்குமிடையில் கைகலப்பு வலுக்க ஆரம்பித்தது.
ஊரடங்குச் சட்டமும், குஜராத் பாணியில் சூரையாடப்பட்ட முஸ்லிம்களும்.
இரு தரப்பு கைகலப்பைத் தொடர்ந்து அதிகாரிகளினால் சுமார் 6.45 மணியளவில் அளுத்கமையை ஒட்டிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்து பள்ளியில் ஒன்று குழுமி இருந்த முஸ்லிம்களால் தங்கள் வீடுகளுக்குக் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பொதுபல சேனாவின் காடையர் கும்பல் ஆண்களில்லாத முஸ்லிம்களின் வீடுகளை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்திருக்க தீயிட்டுக் கொழுத்த ஆரம்பித்தனர். கல்லெறிந்து தாக்கத் துவங்கினர். கடைகளையும் பள்ளி வாசல்களையும் கூட தீயிட்டு கொழுத்தினர். பல முஸ்லிம்களை கூரிய ஆயதங்களால் வெட்டிச் சாய்த்தனர். அரச பின்புலத்து ஆதரவுடன் இடம்பெற்ற இவ்வினச்சுத்திகரிப்பு தாக்குதல் இவ்வாக்கம் எழுதப்படும் வரை தொடர்ந்த வண்ணமே உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
நரவேட்டையாடப்பட்ட இடங்களும் நாசம் விளைவிக்கப்பட்ட சொத்துக்களும்
அளுத்கமை, தர்கா நகர், வெல்பிடிய, அதிகரிகொட, ஆகிய பகுதிகளில் இந்நிமிடம் வரை தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. அளுத்கமை என்பது ஒரு பக்கம் ஆற்றையும், இதர மூன்று பக்கங்களும் சிங்கள கிராமங்களால் சூழப்பட்ட ஒரு பிரதேசமாகும். இப்பௌதீக அமைப்புக்குள் சிக்கிக் கொண்ட முஸ்லிம்களின் கோடிக்கணக்கான ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த சொத்துக்கள் இது வரை அழிக்கப்பட்டுள்ளன. 10 க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் எறிந்துள்ளன. அனுமாணிக்க முடியாதளவுக்கு வீடுகள் தாக்கப்பட்டு கொழுத்தப்பட்டுள்ளன. ஊர்ஜிதமான தகவலின் படி 3 க்கு மேற்பட்ட பள்ளிவாயல்கள் எறிக்கப்பட்டுள்ளன. பலர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இது வரை மொத்தமாக 40 க்கும் மேற்பட்டவர்கள் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வெளிப்பிடிய பகுதியில் கலகக் காரர்களால் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி இது வரை 3 பேர் மரணத்தை தழுவியுள்ளனர்.
அளுத்கமையிலிருந்து பேருவளையை நோக்கி நகர்த்தப்பட்ட இனவாதத் தீ
அளுத்கமையில் ஆரம்பித்த இவ்வினவாத தாக்குதல் பேருவளையை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தப்பட்டு, தற்போது பேருவளையும் அதன் அண்டிய பகுதிகளும் கூட இனவாதத் தீயில் கருகிக் கொண்டு உள்ளன.
குறிப்பாக பேருவளை அம்பேபிடிய எனும் பகுதியை அண்டிய இடங்களில் அமைந்துள்ள முஸ்லிம்களின் வீடுகள் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளன. பெண்கள், குழந்தைகள் எல்லோரும் அங்கு அமைந்துள்ள ஜாமியா நளீமியா கலாபீடத்தி்ல தஞ்சமடைந்து உயிர் அச்சத்துடன் பதறிக்கொண்டு உள்ளனர். ஜாமியாவை சுற்றி காடையர்களின் வெறியாட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. முஸ்லிம்கள் அச்சத்துடனும் தங்கள் உயிர்களுக்கு உத்தரவாதம் அற்ற நிலையிலும் பீதியுற்று நிற்கின்றனர்.
சிறைப்படுத்தப்பட்டுள்ள அமைச்சர்கள்.
இக்கலவர சூழ்நிலையை அவதாணிக்கும் பொருட்டு களத்திற்கு விறைந்த நீதி அமைச்சர் ரவுப் ஹகீம் மற்றும் ஜே.வீ.பி கட்சியின் தலைவர் அநுர குமார திஸாநாயக என்போர் பேருவளைக்குள் நுழையவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் சட்டத்தரணி ஸிராஸ் நூர்தீன் போன்றவர்கள் ஜாமியாவுக்குள் இருந்து வெளியேற முடியா வண்ணம் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஊரடங்கைத் தாண்டிய நாதாரிகளின் கொலை வெறித் தாக்குதல்
பேருவளையில் கருக்கொண்ட இனச்சுத்திகரிப்பை அடுத்து இரவு 8.45 மணியளவில் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்த போதினிலும், காடையர்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணமே உள்ளன. பேருவளை ஓசேன்ட் கிறேண்ட் வறவேற்பு மண்டபம் தீயில் கருகியுள்ளது.
தெஹிவலையிலும் வலை பிண்ணல் – தாக்குதலில் இனவாதிகள்
தர்கா நகர், பேருவளை தாக்குதல் நடைபெறும் அதே சமயம் தெஹிவலை “ஹார்கோட்ஸ்“ மருந்தகம் கூட இத்தாக்குதலின் விளைவாக எதிர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்கள் கையில் ஆயுதம் வந்தது எப்படி?
சாதாரண ஆர்ப்பாட்டத்திற்குத் தான் இவர்கள் வந்திருப்பார்களேயானால் பள்ளிகளையும், வீடுகளையும், கடைதொகுதிகளையும் தாக்கி அழிக்கும் அளவுக்கு ஆயுதங்களுடன் வந்திருக்க சாத்தியமெ இல்லை. அப்படியிருக்க பாரிய உயிர் சேதங்களை ஏற்படுத்தி, சொத்துக்களை அழிக்கும் அளவுக்கு தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளத எனில் இது ஏலவே நன்கு திட்டமிடப்பட்டு நெறிப்படுத்தப்பட்டு, அரங்கேற்றப்பட்ட நாடகம் என்பது தெளிவாகிறது.
காடையர்களின் வெறியாட்டமும், காவல் துறையின் கண்டுகொள்ளாமையும்.
அத்துடன், இவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் கண்ணெதிரே நடந்த போதும் அதனை தடுக்காததொடு, உரிய நேரத்தி்ல போதியளவு அதிகாரிகளை களத்தில் இறக்காமை போன்ற காவல் துறையினரின் நடவடிக்கைகள் யாவும் இத்தாக்குதல் குறித்த தகவல் முன்கூட்டியே உரிய உயர் பீடங்களுக்கு எத்தி வைக்கப்பட்டுத் தான் நடந்தேறியுள்ளதோ என்ற வலுவான ஐயத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.
குனூத்துடன் கூனிப்போன ஜம்இய்யதுல் உலமா.
மஸ்லிம்களின் இருப்பை கேள்விக் குறியாக்கி, உயிர், பொருள் சேதங்களை ஏற்படுத்தி முழுமையான இனச்சுத்திகரிப்புக்கான முஸ்தீபுகள் முன்னெடுக்கப்படும் இத்தருணத்தில், “தனது உயிருக்காகவும், சொத்துக்காகவும் போராடி எவன் மரணிக்கின்றானோ அவன் உயிர்த்தியாகியாவான்“ என்ற நபிகளாரின் வீர உணர்வை மஸ்லிம்களின் நா நாளங்களில் தனது வார்த்தைகளால் பாய்ச்ச கடமைப்பட்ட ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் குனூத்துடன் மட்டுப்பட்டு, ”வீடுகளுக்குள் அடைந்துகிடங்கள் நன்றாக கதவுகளை பூட்டிக் கொள்ளுங்கள்” என்ற தொடை நடுங்கித்தனத்தை விதைத்துள்ளமை கண்டிக்கப்பட வேண்டிய அனுகுமுறையாகும். சமூகத்தை தவறாக வழிகாட்டும் போக்குமாகும்.
வண்மையாக கண்டிக்கிறது ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
இன்று தர்கா நகர் ,பேருவளை மற்றும் இன்னும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள மஸ்லிம்களுக்கு எதிரான இனவாத தாக்குதலை நாம் வண்மையாக கண்டிப்பதோடு, இத்தாக்குதலுக்கான மூல கர்த்தாவாக பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞான சார தேரரே உள்ளார் என்பதால் அரசு இவரை உடனடியாக கைது செய்வதோடு, இவர் விடயத்தில் மிகக் கடுமையான தண்டணையை வழங்கி நீதியை நிலைநாட்டுமாறும் வினயமாய் வேண்டிக் கொள்கின்றோம். மேலும் களவரத்தில் யாரெல்லாம் ஈடுபட்டார்களோ அவர்களை இனம் கண்டு உடனடியாக கைது செய்ய தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
முஸ்லிம்களே ! கோழைத்தனத்தை விட்டு ஜனநாயக வழியில் வீர உணர்வை நோக்கி வீறு நடை போடுவோம்!
இனவாதம் தாண்டவமாடும் இந்நிர்க்கதி நிலையில் அச்சப்பட்டு, வீர உணர்வை இழந்துவிடாது உறுதியாக நிற்பது எமது கடமையாகும். இனவாதிகளுக்கு அஞ்சாது அல்லாஹ்வுக்கு மட்டும் அஞ்சியவர்களாய், ஜனநாயக வழ முறைகளுக்கு உட்பட்டு எமது போராட்டத்தினை தொடர்வதற்கு நாம் தயாராக வேண்டும். ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கும் வரை இன்ஷா அல்லாஹ் உங்களுடன் இறுதி வரை களத்தில் நிற்கும் என்ற உத்தரவாதத்தை அல்லாஹ்வை சாட்சியாக வைத்துத் தருகின்றது.
மிருக நேயத்தை பேசுவோரின் மனித நேயமற்ற காட்டுமிராண்டித்தனம்
பொது பல சேனா உள்ளிட்ட காவித் தீவிரவாத அமைப்பினர்கள் பெரும்பான்மை மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கையில் எடுத்த ஆயுதம் தான் “மிருகெ நேயம்“! ஆனால், ஐயறிவு படைத்த மிருக நேயத்துக்காய் குரல் கொடுத்தவர்கள், ஆறறிவு படைத்த மனித நேயத்தை மறந்து நரமாமிச வேட்டையில் இறங்கியமை இவர்களின் உண்மையான முகத்தை தோலுறித்துக் காட்டப் போதுமான சான்றாகும்.
இனவாதம் ஒழியும் வரை ஜனநாயக வழிப் போராட்டம் தொடரும்
இலங்கை முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி, பொருளாதாரத்தை சூரையாடி, உயிர்களை காவுகொண்டு முழுமையான இனச் சுத்திகரிப்புக்குண்டான களத்தை உருவாக்கும் இனவாதிகளின் கொட்டத்தை அரசு உடனடியாக தலையிட்டு தடுப்பதற்குண்டான வழிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் தனது ஜனநாயக ரீதியான போராட்டத்தை உத்தியோக பூர்வமாக அறிவிக்கின்றது. எமக்கான நியாயமான உரிமைகள் மீட்டுத்தரப்படும் வரை எமது போராட்டம் வீறியமாய் தொடரும் என்பதை பகிரங்கப்படுத்துகின்றோம்.