கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட சகல பகுதிகளிலுமுள்ள தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
வவுனியா
2016 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தேசிய ரீதியில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிசிகன் 195 புள்ளிகளை பெற்று தமிழ் மொழி மூலம் முதலாமிடம் பெற்றுள்ளதுடன் தேசிய மட்டத்தில் இரண்டாமிடத்தினையும் பெற்றுள்ளான்.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில், யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவி உமாசங்கர் ஜயனி 194 புள்ளிகளை பெற்று தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தையும் மாவட்ட ரீதியில் முதலிடத்தினையும் பெற்றுள்ளார்.
அத்துடன், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையை சேர்ந்த கேதீசன் துஷானன் மற்றும் யாழ் ஜோன் பொஸ்கோ பாடசாலையை சேர்ந்த கிளமென்ற் லின்ரன் விஜயக்குமார் பற்றிக் ஆகிய இருவரும் 191 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவன்!
தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட ரீதியில் களுவாஞ்சிகுடியினைச் சேர்ந்த மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் மாணவன் தெய்வேந்திரன் அபிட்சன் 190 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.
மட்/ பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலை களுவாஞ்சிகுடியில் கல்வி பயிலும் இம் மாணவனின் பெற்றோர்களான தெய்வேந்திரன் மற்றும் விமலா ஆகியோர் ஆசிரியராக கடமையாற்றுவதுடன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் மூத்தவராக அபிட்சன் பிறந்துள்ளார்.
மன்னார்
தரம் 5 புலமைப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மாவட்ட ரீதியில் இரண்டு மாணவர்கள் முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
மன்னார்-அல்-அஸ்ஹர் ம.வி தேசிய பாடசாலை மாணவன் ஹிஜாஸ் ஹினான் அஹமட் மற்றும் மன்-புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலை மாணவி விமலதாசன் ஜொசிபியா ஆகிய இரு மாணவர்களும் 180 புள்ளிகளைப் பெற்று மன்னார் மாவட்ட ரீதியாக முதல் இடத்தை பெற்றுள்ளனர்.
அம்பாறை
அத்துடன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த முஹம்மட் ஜப்பார் ஆதீக் அஹமட் என்ற மாணவன் 187 புள்ளிகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதல் நிலையை பெற்றுள்ளார்.
அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலயத்தின் மாணவர் இந்த விசேட சித்தியைப் பெற்றுள்ளதுடன், அப்பாடசாலையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 17 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
மலையகம்
இதேவேளை மலையகம் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா சென்.ஜோசப் ஆரம்ப வித்தியாலய மாணவி தேவராஜ் லதுர்ஷிகா 186 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.
அத்துடன் இதே வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான வீரரவி சதுர்ஷனும், ஹற்றன் ஹைலண்ஸ் கல்லூரியின் மாணவன் கிஷான் கனிஷ்கரும் 185 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
மாத்தறை
இதேவேளை, மாத்தறை மாவட்ட தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 22 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
இந்த பரீட்சை முடிவுகளுக்கு அமைய மாத்தறை மெதடிஸ் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சிதிஜா நிரன் சமரவிக்ரம 196 புள்ளிகளைப் பெற்று தேசிய ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.