மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டம்

224

batticola

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டம், அதன் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதியிடம் அந்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியனால் கையளிக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் 2017 முதல் 2019 வரையான 3 ஆண்டு திட்டமானது நேற்று பகல்(04) கொழும்பிலுள்ள மீள்குடியேற்ற அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில், மட்டக்களப்பு மாவட்ட மீள்குடியேற்ற பகுதிகளை உள்ளடக்கிய வகையில் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலில் 50530.79 மில்லியனுக்கான திட்டங்கள் உள்ளடக்க பட்டுள்ளதாகவும் ,2017ஆம் ஆண்டு 15036.92, 2018ஆம் ஆண்டில் 17567.10, 2018ஆம் ஆண்டில் 17926.77 மில்லியன் ரூபாவும் செலவிடப்படும் வகையில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மீள்குடியேற்ற பிரதேசங்களுக்கான அபிவிருத்தி திட்டங்கள் இல்லாமை காரணமாக மீள்குடியேற்ற வேலைகளுக்காக நிதிகளைக் கோருவதில் பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்டன.

இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்க அதிபரால் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கமைய மாகாண திட்டமிடல் செயலகத்தின் பிரதி பிரதம செயலாளர் வி.மகேந்திரராஜாவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பிரதேசங்களின், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்களின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் அபிவிருத்தி திட்டத் தயாரிப்பின் ஆலோசகராக பி.சிவப்பிரகாசம் செயற்பட்டிருந்தார்.

இந்த திட்டத்தின் கலந்துரையாடல்கள் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதும், தேவையான வீடமைப்பு, பொது சுகாதாரம், குடிநீர் வழங்கல், வாழ்வாதாரங்கள், கிராமிய வீதி அபிவிருத்தி, யுத்த காலத்தில் இடம் பெயர்ந்த மற்றும் மீள் குடியமர்த்தப்பட்ட காலத்திற்கும் இடையில் உருவாகிய புதிய குடும்பங்களுக்கான வேலை திட்டங்கள், சுகாதார மருத்துவ வசதிகள், சமூக அபிவிருத்தி, உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் உள்வாங்கப்படும் வாழ்வாதார மேம்பாடு, குடிநீர் பற்றாக்குறை காணப்படுகின்ற பிரதேசங்களுக்கு குடிநீர் விநியோக திட்டங்களை விஸ்தரித்தல் மற்றும் புதிய சாத்தியமான கிராமிய குடிநீர் வழங்கலை அமுல்படுத்துதல், அதிகளவு வருமானத்தினைப் பெற்றுத் தரக்கூடிய திட்டங்கள் ஆகியன உள்வாங்கப்பட்டுள்ளன.

அத்துடன், கடந்த காலங்களில் இடம்பெயர்ந்து வேறு பிரதேசங்களில் தங்கியிருந்தவர்கள், வன்னி பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு திரும்பியவர்கள், முன்னாள் போராளிகள், இந்தியாவில் அகதிகளாகத் தங்கியிருந்து நாடு திரும்பியவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கான செயற்திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE