கொல்கத்தாவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை இந்தியா 178 ஓட்டங்களால் வென்றது.
இதன் மூலம் டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றி தரவரிசையில் முதலிடத்தை பிடித்து சாதித்தது இந்தியா.
இந்தப் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும் 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டும் மொத்தம் 6 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.
ஆனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஷமிக்கு ஒரு பெரிய சோதனை நடந்தது. இதனால் அவர் நிலைகுலைந்து போய்விட்டார்.
ஷமி 2வது நாள் ஆட்டத்தில் ஆடிக் கொண்டிருக்கும் போது ஷமியின் மகள் ஆயிரா கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டார்.
இதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தையை அதிகப்படியான காய்ச்சல் காரணமாக ஐ.சி.யூ.வில் சேர்த்துள்ளனர்.
மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் 3 நாட்களாக குழந்தை இருந்துள்ளது.
இந்த தகவல் மைதானத்தில் இருந்த ஷமிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர் கவலையில் நிலைகுலைந்து போய்விட்டார்.
அந்த சமயத்தில் அணித்தலைவர் விராட் கோஹ்லியும் சக வீரர்களும் ‘குழந்தை விரைவில் குணமடைந்து விடுவாள்’ என ஆறுதல் அளித்துள்ளனர்.
இதையடுத்து சகஜ நிலைக்குத் திரும்பிய ஷமி பந்துவீச்சில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து ஷமி கூறுகையில், மகள் ஆயிரா ஐ.சி.யூவில் அனுமதிக்கப்பட்ட தகவல் கேட்டு பதற்றமடைந்தேன். ஆனால் சக வீரர்கள் எனக்கு தந்த ஆறுதலால் களத்தில் சிறப்பாக செயல்பட முடிந்தது என்று தெரிவித்துள்ளார்.