மலையக இளைஞர், யுவதிகள் மத்தியில் தலைமைத்துவ பண்புகள் மேம்படுத்தப்படவேண்டும் – சோ.ஸ்ரீதரன்

244

தமது சமூகத்தை சிறந்த முறையில் வழிநடத்துவதற்கு அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற இளைஞர், யுவதிகள் தத்தமது தலைமைத்துவ பண்புகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோஸ்ரீதரன் தெரிவித்தார்.

சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஏற்பாட்டில் அட்டன் சீடா வள நிலையத்தில் இடம்பெற்ற மலையகத் தலைவர்கள் மற்றும் மலையக இளைஞர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி என்ற தலைப்பில் இடம்பெற்ற செயலமர்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் ஏ.நல்லுசாமி தலைமையில் இடம்பெற்ற இந்தச் செயலமர்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவி மத்திய மாகாணசபை உறுப்பினர் திருமதி சரஸ்வதி சிவகுரு, இளைஞரணி தலைவர் சிவநேசன், உபதலைவர் சிவானந்தன் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில், மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் தத்தமது பிரதேசங்களில் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் இதனைத் தொழிலாகவும் சேவையாகவும் செய்து வருகின்றனர். இந்தப்பணியைச் சிறப்பாக செய்வதற்கும், எதிர்காலத் தலைவர்களாக உருவாகுவதற்கும், தலைமைத்துவத்துக்கான அடிப்படைப் பண்புகளைத் தெரிந்து அவற்றை மேம்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே இந்தச் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளோம். தாம் பொறுப்பெடுக்கின்ற காரியங்களை நிறைவாகச் செய்து முடிப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலைமைத்துவ ஆற்றல் இருக்கவேண்டும்.

தான் பொறுப்பெடுக்கின்ற செயலை இயக்குகின்ற இயக்குநராகவும், பாராட்டுகின்றவராகவும், பொறுப்புணர்வு மிக்கவராகவும், முன்மாதிரியானவராகவும், மகிழ்ச்சியூட்டுபவராகவும், திட்டமிடல் உடையவராகவும், தீர்மானிக்கும் ஆற்றல் உட்பட பல பண்புள்ளவராகச் செயற்படவேண்டும்.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் அமைச்சருமான திகாம்பரம் தனது தலைமைத்துவ பண்புகளைப் படிப்படியாக வளர்த்துகொண்டு இன்று இந்த நாட்டின் முக்கிய அமைச்சராக செயற்படுகின்றார். மக்கள் விரும்புகின்ற ஜனரஞ்சக தலைவராக உள்ளார். மக்களை மதிக்கும் திறனற்ற தலைமைகளின் நிலைமைகள் இன்று எவ்வாறு உள்ளதென்பதையும் நாம் கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. எனவே இன்று எமது மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இவர்களுக்கு நாம் இதயசுத்தியுடன் சேவையாற்றுவதற்கு நாம் பொறுப்புள்ளவர்களாகச் செயற்பட வேண்டும்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

unnamed-2

unnamed-3

unnamed-4

unnamed-5

unnamed-6

SHARE