ஈழத்துத் திருப்பதி எனப் போற்றப்படும் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஐப் பெருமாள் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த்திருவிழா நேற்று மிக விமரிசையாக இடம்பெற்றது.
கருவறையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாளுக்கும் வசந்த மண்டபத்தில் எழுந்தருருளியுள்ள வேங்கடேசப்பெருமாள்,சீதேவி,பூதேவி ஆகிய தெய்வங்களுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் என்பன சிறப்பாக இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து மேள,தாள வாத்தியங்கள் முழங்க, உரிய மந்திரங்கள் ஓத, குடை, கொடி, ஆலவட்டம் என்பன புடை சூழ வசந்த மண்டபத்திலிருந்து எழுந்தருளிய முத்தெய்வங்களும் தண்டிகை பீடத்தில் உள்வீதி வலம் வந்ததைத்
தொடர்ந்து சித்திரத் தேரில் ஆரோகணம் செய்து பக்தர்களுக்கு அருட் காட்சியளித்தனர்.
ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ ரமணீதரக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் தேர்த் திருவிழாக் கிரியை மற்றும் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தனர்.
யாழ். குடாநாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு ஸ்ரீ வேங்கடேசப்பெருமாள், மற்றும் சீதேவி, பூதேவி ஆகியோரின் அருட்கடாட்சத்தினைப் பெற்றுக் கொண்டனர்.
இவ்வாலயத்தின் தீர்த்தோற்சவம் கடந்த 02 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகித் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதுடன் இன்று 09 மணிக்குத் தீர்த்தோற்சவமும், மாலை-03 மணிக்குக் கொடியிறக்க வைபவமும் இடம்பெறவுள்ளமை சிறப்பம்சமாகும்.