ரவிராஜ் படுகொலை விசாரணை! ஜூரிகள் சபையா? தனி நீதிபதியா? இன்று தெரியும்!

501

n-raviraj

படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் விவகார வழக்கினை ஜூரிகள் சபை முன்னிலையிலா அல்லது தனி நீதிபதி முன்னிலையிலா விசாரணை செய்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நேற்று எழுத்துமூல வாதங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

ரவிராஜ் படுகொலை விவகார வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனின் ஆலோசனைக்கமைய ஆஜரான சட்டத்தரணி டிரான் என்டன் எழுத்துமூல வாதத்தை நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.

கடந்த தவணை விசாரணையின் போது முறைப்பாட்டாளர் தரப்பான சட்டமா அதிபருக்கும் நேற்றைய தினம் எழுத்துமூல வாதங்களை சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்த போதும், வழமையாக மன்றில் ஆஜராகும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ரொஹந்த அபேசூரிய நேற்று மன்றில் ஆஜராகியிருக்கவில்லை.

இந்நிலையில் மன்றில் இருந்த அரச சட்டவாதி சுஹர்ஷி ஹேரத் மன்றில் எழுத்துமூல வாதங்களை சமர்ப்பிக்க இன்று வரை கால அவகாசம் கோரினார்.

இதற்கு அனுமதியளித்த நீதிபதி மணிலால் வைத்தியதிலக இன்றைய தினம் எழுத்துமூல வாதங்களை சமர்ப்பிக்க சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அவகாசம் வழங்கினார்.

இந்நிலையில் இன்றைய தினம் முறைப்பாட்டாளர் சட்டமா அதிபர் சார்பிலான எழுத்துமூல வாதங்கள் மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பிலான எழுத்துமூல வாதங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அந்த வாதங்கள் மீது எதிர்ப்பு வெளியிட பிரதிவாதி தரப்புக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இந்தப் படுகொலை விசாரணைகள் ஜூரிகள் முன்னிலையிலா அல்லது தனி நீதிபதி முன்னிலையிலா விசாரணை செய்வது என தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE