தோட்டத் தொழிலாளர்களுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!

201

160331104308_lanka_estate_512x288_bbc_nocredit

சம்பள உயர்வு கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.

லயன் வாழ்க்கை முறைக்கு இன்னமும் முடிவு கட்டப்படாத கொடூரம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

இதுதவிர இடையிடையே ஏற்படும் மண் சரிவில் உறவுகளைப் பறிகொடுத்து தலையில் அடித்து அழுகின்ற அந்தப்பெரும் துயர் மனிதநேயம் உடையவர்களின் இதயங்களைக் கருக்கிவிடும்.

அந்தளவுக்கு மலையக மக்களின் வாழ்க்கை என்பது பலவழிகளிலும் துன்பம் நிறைந்ததாக அமைந்து போகிறது.

எனினும் மலையக தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களின் எதிர்காலம் பற்றி அரசாங்கம் எதுவும் கவலை கொள்வதாக இல்லை.

இந்தியாவின் பிரதமராக இருந்த சாஸ்திரியும் இலங்கைப் பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கவும் ஒப்பந்தம் எழுதி நாடற்றவர்கள் என்று மலையக தோட்டத் தொழிலாளர்களை அறிவித்த கயமை என்பது இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து செய்த பெரும் வஞ்சகமாகும்.

தோட்டத் தொழிலாளர்களின் வியர்வையில், அவர்களின் உழைப்பில் சீவியம் நடத்திய இலங்கை மண் அந்த மலையக மக்களை நாடற்றவர்களாக வஞ்சித்தமை இலங்கையின் மிகப் பெரும் துரோகத் தனமாகும்.

கல்வி அறிவில்லாத, வறுமையின் உச்சத்தில் வாடிய மலையக தோட்டத் தொழிலாளர்களை வதைத்து அவர்களின் உழைப்பை பெற்ற முதலாளித்துவ சமூகம் அவர்களின் கூலியைக் கொடுப்பதில் காட்டிய வஞ்சகத்தனம் சொல்லும்தரமன்று.

மனித வாழ்க்கையில் மிக மோசமான அவலங்களைச் சந்தித்த மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை வீட்டு வேலைக்கமர்த்தி அவர்களின் முதுகுத்தோல் உரித்த பாவ காரியத்தைச் செய்த மிகப்பெரும் அதர்மத்தில் எமக்கும் பங்குண்டு என்பதை மறுதலித்து விட முடியாது.

அதேநேரம் ஏதும் அறியாத மலையக தோட்டத் தொழிலாளர்களின் கல்விக் கண்ணை திறந்து விட்ட மிகப்பெரும் புண்ணியத்தைச் செய்த உபாத்தியாயர்கள் யாழ்ப்பாணத்தவர்கள் என்ற உண்மையை இன்னமும் மலையகத் தமிழ் மக்கள் நினைந்து உருகுவதைக் காணமுடியும்.

இவ்வாறான கல்வி விழிப்புணர்வின் பயனாக இன்று மலையக தோட்டத் தொழிலாளர்களிடையே தொழிற்சங்கமும் நலன்புரி அமைப்புகளும் உருவாகியுள்ளமை திருப்தி அளித்தாலும் அவை முழுமை பெறவில்லை என்பதும் உண்மையே.

இத்தகையதொரு நிலைமையில் தோட்டத் தொழிலாளர்கள் தமது நாளாந்த வேதனத்தை உயர்த்துமாறு கோரிக்கை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களின் இந்த நியாயபூர்வமான போராட்டத்துக்கான ஆதரவு நாடு பூராகவும் எழுகை பெற வேண்டும்.

இன, மத, மொழி வேறுபாடுகளைக் கடந்து இந்த நாட்டில் மலையக தொழிலாளர்களும் வாழ வேண்டும். அவர்களும் சாப்பிட வேண்டும், அவர்களும் கல்வி கற்க வேண்டும் என்ற நியாயபூர்வமான அடிப்படை யில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள ஏற்றத்தை ஆதரிப்பது அனைவரினதும் கடமையாகும்.

உலக நாடுகள் முழுவதிலும் வறுமைப்பட்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் நிவாரண உதவி வழங்கி அவர்களின் வாழ்க்கைக்கு உதவுகின்ற சமூக நீதி உச்சமடைந்து வருகின்ற வேளையில் எங்கள் நாட்டில் மட்டும் காலை முதல் மாலை வரை தோட்டத்தில் கொழுந்து பறித்து உழைக்கின்ற அப்பாவி மலையகத் தமிழரின் குருதியை அட்டைகள் குடிக்க அவர்களின் வியர்வையை தோட்டத் துரைமார்கள் தங்களின் சம்பாத்திய பயிருக்கு நீராக உறிஞ்சுகின்றனர்.

எனவே இந்த அநியாயம்  அறுத்தெறியப்பட வேண்டும். இதற்காக தோட்டத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு கோரி நடத்தும் போராட்டத்துக்கு நாமும் ஆதரவு கொடுத்து அவர்களையும் உயர்த்தி விடுவோம்.

SHARE