தோட்டத்தொழிலாளர்களை மீண்டும் வீதியில் இறக்கிப் போராட்டங்களை நடத்தத் தூன்டிவிட முற்படுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அட்டன் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைபாட்டு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் 12.10.2016 அதாவது இன்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாய் சம்பளவுயர்வுகோரி கடந்த சில நாட்களாக மலையகம் எங்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். போராட்டத்தினூடாக அமைதி நிலை சீர்குலைந்ததுடன் தொழிலாளர்களுக்கு 8000 ரூபாய் வரையிலும் நட்டம் ஏற்பட்டு பொருளாதார ரீதியில் பாதிப்படைந்துள்ளனர்.
எனினும் தற்போது தொழிற்சங்கங்களும், முதலாளிமார் சம்மேளனமும் பேச்சுவார்த்தைகளினூடாக இனக்கப்பாட்டை எட்டும் வகையில் 730 ரூபாய் வழங்க இணக்கம் கானும் நிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் மலையகத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களைக் கைவிட்டு அமைதி நிலையில் உள்ளனர்.
அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சில அரச சார்பற்ற நிறுவனங்களும், தொழிலாளர் மத்தியில் வாக்குப் பலம் இல்லாத சில தொழிற்சங்கங்களும் மக்கள் மத்தியில் பலத்தை அதிகரித்துகொள்ளும் வகையில் தோட்டங்களுக்குச் சென்று போராட்டங்களை நடத்தக்கோரி போலியான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறான நிலை ஏற்படுமானால் மீண்டும் மலையகத்தில் இயல்பு நிலை பாதிப்படையும்.
ஆகவே இவ்வாறு மக்கள் மத்தியில் போலி பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரியே முறைப்பாட்டு மனுவை வழங்கியதாகவும், மேலும் இவ்வாறான விடயங்களுக்கு சில வெளிநாட்டு ஊடகங்கள் துனைபோவதாகவும் தொழிலாளர்கள் போலி பிரச்சாரங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்