ரெமோ படக்குழுவினருக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விழாவில், படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் பேசுகையில் இப்படத்தில் நடித்த , முதலில் மக்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் எங்களது நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.
இப்படத்தில் பயணித்த அனைவரும் நன்றாக நடித்துள்ளனர், இன்னும் கொஞ்சம் கூட சிறப்பாக செய்திருக்கலாமே என்று சொல்லத் தோன்றும். ஆனால், அதைக்கூட சொல்ல முடியாத அளவுக்கு நிறைவாக செய்திருக்கிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.
ஒரு படம் நடித்து முடித்தபிறகு அந்தப் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருக்கும் சூழல் மிகவும் கடினமானது. ரஜினி முருகன் படம் வெளியாவதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, வெளிவரும் படங்களை தடுக்காதீர்கள். எங்களை வேலை செய்ய விடுங்கள்.
உங்களைப் போன்ற சாதாரண இடத்தில் இருந்து வந்துதான் மேடை ஏறியிருக்கிறேன். இதை தக்கவைக்க வேண்டும் என்றோ, அதைவிட பெரிய இடத்திற்கு போக வேண்டும் என்றோ நான் செயல்படவில்லை.
நானும் ராஜாவும் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி மக்களை மகிழ்விக்க போராடுகிறோம். என்றாவது ஒருநாள் அனைவரையும் மகிழ்விக்கும் ஒரு சிறந்த படத்தை கண்டிப்பாக இந்த டீம் கொடுக்கும்.
நான் எல்லா மேடையிலும் அழுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நான் உண்மையாக இருக்கிறேன் அவ்வளோதான் என கண்ணீர் மல்க தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.