வடபகுதியை புறக்கணித்தமையே ஆயுதம் ஏந்துவதற்கு காரணம்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

501

60e7665555aed397f245d17f269425d3_l

இந்த நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் வடபகுதியை புறக்கணித்ததன் காரணத்தினாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலை ஏற்பட்டது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று அனுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்,

நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது அனைத்து மாவட்டங்களையும் சரிசமமாக கவனிக்க வேண்டும். கடந்த காலங்களில் பாரபட்சம் காட்டியதன் காரணமாகவே சில மாவட்டங்களில் அபிவிருத்திகள் பாதிக்கப்பட்டன.

அந்த நிலை எமது நல்லாட்சிக் காலத்தில் இடம்பெறாது என நான் உறுதியளிக்கின்றேன்.

நான் அண்மையில் யாழ். சென்றபோது வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், எந்த அரசாங்க காலத்திலும் கிடைக்காத நிதி இம்முறை கலிவி அபிவிருத்திக்கு வடமாகாணத்திற்கு கிடைத்துள்ளதாக மிக சந்தோசத்துடன் கூறினார். இதனையே வடமத்திய மாகாண முதலமைச்சரும் தெரிவிக்கின்றார்.

வடமத்திய மாகாண குறைகளை நான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது அப்போதிருந்த ஜனாதிபதிகள் இருவருக்கும் எடுத்துக்கூறினேன். கடுமையான தொனியிலும் சொல்லிப் பார்த்தேன். ஆனால் உரிய பலன் கிடைக்கவில்லை.

தற்போதைய நல்லாட்சியில் மாகாண ரீதியில் வேறுபட்ட அபிவிருத்தியின்றி அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவு நிதி வழங்கப்படுகின்றது.

வடக்குக்கு நாம் செய்த அசாதாரணங்கள் அவர்களை ஆயுதம் தூக்கச் செய்தது. நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் வடக்குக்கு எத்தனை அமைச்சுப் பதவிகளை வழங்கினோம்? அவர்களை எவ்வாறு கவனித்தோம்? இவற்றை நாம் சிந்திக்க வேண்டும் என்றார்.

SHARE