இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் இராஜினாமா

203

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க தனது இராஜினாமா கடிதத்தை இன்று சமர்ப்பித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை நீதிமன்றிற்கு அழைத்தமை தொடர்பில், கடந்த வாரம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியாகியிருந்தது.

குற்றப்புலனாய்வு பிரிவினர், நிதிமோசடி விசாரணைப்பிரிவினர், மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு போன்றவை அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு செயற்படுமானால் அவற்றுக்கு எதிராக தீர்மானங்களை எடுக்க நேரிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கூறியிருந்தார்.

மேலும் ஜனாதிபதியின் இந்த கருத்து காரணமாகவே இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் டில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தில்ருக்ஸி டயஸ் பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டது

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஸி டயஸ் விக்ரமசிங்கவின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பிய தில்ருக்ஸி இன்று தமது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த இராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கொழும்பு இணைய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தொடர்பில் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தில்ருக்ஸி பதவி விலகுவார் என அறிவிக்கப்பட்டது.

பின்னர் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தலையீடு செய்து பதவி விலகுவதனை தடுத்ததாகக் கூறப்பட்டது.

எனினும் நாடு திரும்பியதும் தில்ருக்ஸி தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

SHARE