ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை தானே கொலை செய்ததாக கூறி கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட ஓய்வுபெற்ற இராணுவப் புலனாய்வு அதிகாரி தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் புதிய திசை நோக்கி திரும்பியுள்ளது.
கேகாலையை சேர்ந்த இவர் கடந்த 14 ஆம் திகதி அதிகாலை தனது வீட்டில் சமையல் அறையில் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரேமானந்த உதலாகம என்ற புலனாய்வுப் பிரிவு அதிகாரியை விடுதலை செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் கூறியிருந்தார். உதலாகம தனது நண்பர் எனவும் அதில குறிப்பிட்டிருந்தார்.
எனினும் கடிதத்தில் உதலாகமவின் பெயர் தவறாக எழுதப்பட்டிருப்பதாக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தனது நண்பரின் பெயரை எப்படி தவறாக எழுத முடியும் என்ற சந்தேகம் விசாரணை அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கடிதத்தில் உள்ள கையெழுத்து தொடர்பாகவும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே ஓய்வுபெற்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியின் இறுதிச் சடங்கு நேற்று கேகாலை புவக்பிட்டி பொது மயானத்தில் நடைபெற்றது.