மத்திய மாகாணத்தை நிரந்தர வசிப்பிடமாகக்கொண்ட கல்வியியற்கல்லூரி டிப்ளோமாதாரிகளுக்கு அந்தந்த மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார். மத்திய மாகாணசபை அமர்வில் கலந்துகொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அவர் மேலும், கல்வியியற் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பட்டம் பெற்றவர்களுக்கு அண்மையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது. இதன்போது மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் பலருக்கு வேறு மாகாணங்களிலுள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் கல்வியமைச்சுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டபோது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை அந்தந்த மாகாணத்திலுள்ள கல்வியமைச்சின் ஊடாக மாகாண பாடசாலைகளில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.
இதற்கேற்ப மத்திய மாகாணத்தைச்சேர்ந்த ஆசிரியர்களைத் தமக்குரிய மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடமுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர் நிமயனம் வழங்குவதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த நிலையில் அண்மையில் வெளியாகிய ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத் தமிழ் பாடசாலை மாணவர்களின் பரீட்சை பெறுபேறு கடந்த வருடத்தினை விட குறைவாகக் காணப்படுகின்றது. இதற்கு மத்திய மாகாண கல்வியமைச்சின் தமிழ் பிரிவின் அதிகாரிகளின் செயற்பாடுகளும், அரசியல் ரீதியான அணுகுமுறைகளுமே காரணமாகும். ஆகவே இவ்விடயம் தொடர்பிலும் மத்திய மாகாண கல்வியமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மீண்டுமொரு தொழிலாளர்களுக்கெதிரான துரோக ஒப்பந்தம் – மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்
தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் முதலாளிமார் சம்மேளனத்துடன் இணைந்து கூட்டொப்பந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்குப் பாரிய துரோகத்தினை மேற்கொண்டுள்ளன. இந்தத் துரோக ஒப்பந்தத்தை வன்மையாக எதிர்ப்பதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
கூட்டொப்பந்தம் தொடர்பாக அவர் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த 18 மாதங்களாக 1000 ரூபாய் சம்பளம் கிடைக்குமொன்று தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். இந்தச்சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக நாம் பல்வேறுபட்ட அழுத்தங்களை மேற்கொண்டோம். தொழிலாளர்கள் முன்னெடுத்த போராட்டங்களுக்கும் பக்கபலமாக செயற்பட்டோம்.
தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பளப் போராட்டத்துக்குத் தேசிய மட்டத்தில் வியாபித்திருந்தது. எனினும் அனைவரின் எதிர்பார்ப்பும் இன்று பொய்யாகிவிட்டது. 730 ரூபாய் சம்பளமானது யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்றது. 730 ரூபாயை விட தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பளத்தினை வழங்குவதற்கு முன்வந்தபோதும் கூட்டொப்பந்த தொழிற்சங்கங்கள் கவனத்தில் கொள்ளாத காரணத்தினால் தான் இன்று தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தினைப் பெற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போதைய புதிய கூட்டொப்பந்தத்திற்கேற்ப தோட்டத் தொழிலாளர்களுக்குக் கிடைக்கவேண்டிய சம்பள நிலுவையான சுமார் 49000 ரூபாவும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதால் இந்த நிலுவையை வழங்க முடியவில்லையென்று தோட்ட முதலாளிமார் சம்மேளனம் வெளிப்படையாக சொல்லுகின்றபோது கூட்டொப்பந்த தொழிற்சங்கமொன்று இடைக்காலக் கொடுப்பனவு தான் நிலுவை சம்பளம் பெறமுடியாமைக்குக் காரணமொன்று கூறி தனது கையாலாகாத தனத்தினை வெளிப்படுத்தியுள்ளது. எனவே இந்தத் துரோகத்தனத்துக்குத் தோட்டத் தொழிலாளர்கள் சரியான பதிலை வழங்குவார்கள்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்