கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நாசிவன்தீவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் எண்பது வருடங்களுக்கு பின் புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (18) பாடசாலை மண்டபத்தில் மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.
நாசிவன்தீவு கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கிராம அபிவிருத்திச் சங்க தலைவர் க.தினேஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பெற்றோர்கள், மாணவர்கள், சங்க உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது ஐந்தாம் தர புலமைப் பரிசீல் பரீட்சையில் 164 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து பாடசாலையின் எண்பது வருட வரலாற்றை மாற்றிய மாணவன் திலிப்குமார் சனுஜன் மற்றும் எழுபதுக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற பத்து மாணவர்களுக்கும் பதக்கம் மற்றும் பரிசில்கள் வழங்கி அதிதிகளால் கௌரவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பாடசாலை அதிபர் தெ.ஜெயப்பிரதீபன் மற்றும் கற்பித்த ஆசிரியர் அ.மோகன்ராஜ் ஆகியோருக்கும் பொன்னாடை போர்த்தி, பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
எண்பது வருட வரலாற்றை மாற்றிய மாணவன் திலிப்குமார் சனுஜன் என்பவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தனது சொந்த நிதியில் இருந்து துவிச்சக்கர வண்டி வழங்கியதுடன், மாணவன், பெற்றோர், அதிபர், கற்பித்த ஆசிரியருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டியதுடன், கற்பித்த ஆசிரியருக்கு அன்பளிப்பாக சிறு தொகை பணத்தினை வழங்கி வைத்துள்ளார்.
மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மாணவனை பாராட்டியதுடன், சிறு தொகைப் பணத்தினை அன்பளிப்பாக வழங்கி வைத்துள்ளதுடன் இதன்போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.