நிலுவை கொடுப்பனவு வேண்டும், 730 ரூபா சம்பளம் போதாது – தொடரும் ஆர்ப்பாட்டம்

282

18 மாத நிலுவைப் பணத்தை முதலாளிமார் சம்மேளனம் வழங்கவேண்டும் எனக் கோரி மலையகத்தில் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள் வீதிகளை மறித்தும், ஆலயங்களில் தேங்காய் உடைத்தும் 19.10.2016 இன்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

unnamed-1

கடந்த வருடம் மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த கூட்டு உடன்படிக்கையானது 18 மாதங்களாக பல சுற்றுகள் பேச்சுவார்த்தை நடைபெற்று நேற்று 18.10.2016 முதலாளிமார் சம்மேளனமும் கூட்டு உடன்படிக்கை தொழிற்சங்கங்களும் கைச்சாத்திட்டது.

2016 தொடக்கம் 2018 வரையிலான காலத்திற்கு ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையில் அடிப்படை சம்பளம் 500 ரூபா, வரவுக்கேற்ற கொடுப்பனவு 60 ரூபா, விலை பகிர்வு கொடுப்பனவு 30 ரூபா, உற்பத்தி அதிகரிப்பதற்கான கொடுப்பனவு 140 ருபா எனவும் மொத்த நாட் சம்பளமாக 730 ரூபாவிற்கு முதலாளிமார் சம்மேளனம், அரச தரப்பினர் மற்றும் கூட்டு உடன் படிக்கை தொழிற்சங்கங்களும் இணங்கி கைச்சாத்திட்டனர். இந்நிலையில் கடந்த 18 மாதங்களுக்கான நிலுவைக் கொடுப்பனவு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் வழங்க முடியாது என மறுத்துள்ளது.

unnamed-2

நிலுவைக் கொடுப்பனவுடன் ஆயிரம் ரூபா சம்பளத்தைக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் நடைபெற்ற போதிலும் அது எட்டாக்கனியாக அமைந்தது. இந்நிலையில் மலையக தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் 19ஆம் திகதியும் பொகவந்தலாவ, தலவாகலை மற்றும் ஓல்டன், சாமிமலை பகுதிகளில் சாமிமலை மஸ்கெலியா வீதியில் ஒல்டன் சந்தியில் வீதிகளை மறித்தும், பொகவந்தலாவ கொட்டியாகலையில் முனீஸ்வரர் ஆலயத்திடலில் சிதறு தேங்காய் உடைத்தும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர். 730 ருபாவிற்கு கையொப்பமிட்டு தொழிலாளர்களை காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், 18 மாத நிலுவைக் கொடுப்பனவை கட்டாயம் கம்பனிகள் வழங்க வேண்டும், தீபாவளியைக் கொண்டாட முடியாத நிலையில் திண்டாட வைத்துள்ளதாகவும், ரத்தத்தை உரிஞ்சும் கம்பனியே நிலுவைப் பணத்தைக்கொடு, தொழிலாளர் உழைப்பைக் காட்டிக்கொடுக்காதே, தீபாவளியா அல்லது தீபாவலியா போன்ற வாசகங்களை ஏந்தியவாறு கருப்புக்கொடிகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் தோட்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தினால் மஸ்கெலியாவிற்கான. போக்குவரத்து பல மணித்தியாலங்கள் தடைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
unnamed-3 unnamed

SHARE