தேசிய மட்ட 21 வயதிற்குட்பட்டவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ள வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினியை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று (புதன்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை சமூகமும் பெற்றோரும் இணைந்து, குறித்த மாணவியை கனகராயன்குளம் ஆரம்ப பாடசாலையில் இருந்து ஏ9 வீதி வழியாக வாகனத்தில் ஏற்றி, பாண்ட் வாத்திய இசை முழங்க மாணவர்களின் கரகோசத்துடன் கனகராயன்குளம் மகாவித்தியாலயத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அதனையடுத்து, மாணவியுடன் மாணவியின் பெற்றோர், அவரை பயிற்றுவித்த ஆசிரியர்கள் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய குறித்த மாணவி, 9.76 மீற்றர் தூரத்தில் குண்டு எறிந்து தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வடமாகாணத்திற்கும், வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். மாணவியின் குடும்பம் இறுதிப் போரின் போது இடம்பெயர்ந்து யுத்த அவலங்களை முழுமையாக சுமந்து, தற்போது மீள்குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.