சில ஊடகங்கள் முன்னாள் போராளிகளை மீண்டும் குற்றவாளிகளாக மாற்றும்முயற்சியை மேற்கொண்டு வருவது கவலைக்குரியது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வு தமிழறிவியல் மன்றத்தின் நெறிப்படுத்தலின் கீழ் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் உதவியுடன் நேற்று(19) புதன்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் நடைபெற்றது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அவையங்களை இழந்து நிர்க்கதியான நிலையில் உள்ள முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பத்து பேருக்கு இதன்போது வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
யுத்தம் காரணமாக மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்ட நிலையில் பெரும் கஸ்டத்தின் மத்தியில் தமது வாழ்வாதாரத்தினைக் கொண்டு செல்வோர் அவர்களின் பகுதிகளுக்கு நேரடியாக சென்று தெரிவு செய்யப்பட்டு அவர்களின் திறமைகளுக்கு ஏற்ப தொழில்களை மேற்கொள்வதற்கான உதவிகள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.
போரினால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் பலர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு கஸ்டங்களுடன் வாழ்ந்துவருவதாகவும் புலம் பெயர் தேசங்களில் உள்ள உறவுகள் அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்த முன்வர வேண்டும் என இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வேறு மாவட்டங்களை சேர்ந்த புலம் பெயர் மக்களினாலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான அதிகளவான உதவிகள் வழங்கப்படுவதாகவும் இது தொடர்பில் புலம்பெயர்ந்து சென்றுள்ள மட்டக்களப்பு மக்கள் கூடிய கவனம் செலுத்தி அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இங்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மாற்றுத்திறனாளிகள் அதிகளவு நம்பிக்கையினை வளர்த்துக்கொள்ளவேண்டும். அவர்களுல் பல்வேறு திறமைகள் உள்ளன. கடந்த யுத்தத்தினால் மாற்றுத் திறனாளிகளாக மாற்றப்பட்டவர்கள் அதிகளவில் உள்ளனர்.
அவர்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும். வழங்கப்படும் உதவிகளை சரியான முறையில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி வாழ்வினை மேம்படுத்த வேண்டும்.
இந்த நிகழ்வில் சங்காரவேல் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் சோ.சிவலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், வைத்திய நிபுணர் டாக்டர் அருள்மொழி, தமிழறிவியல் மன்றத்தின் செயலாளர் வி.விஸ்வராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.